உதயநிதியை அமைச்சராக்கலாமா?: சர்வே எடுத்த ஸ்டாலின்

politics

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி போட்டியிட்டு வெற்றி பெற்ற போதே, கண்டிப்பாக அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் உதயநிதியின் அமைச்சர் பதவி இன்னும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது. இதற்கிடையில் இப்போது ஆகிடுவார், இதோ ஆகிடுவார் என பலரும் ஆருடம் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவது தொடர்பாக கருத்துக் கேட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். உளவுத்துறையும் கூட அறிக்கை கொடுத்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
திடீரென முதல்வர் இதனை கேட்க காரணம் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.

திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார் உதயநிதி. ஆனாலும் பல்வேறு அரசு நிகழ்வுகளில் அமைச்சர்களை விட அதீத முக்கியத்துவம் அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் உதயநிதியின் நண்பராகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் இருக்கும் அன்பில் மகேஷ், உதயநிதி அமைச்சராகி தமிழகத்துக்கு சேவை செய்வார் என தொடங்கி வைக்க கட்சி கூட்டங்களில் தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பினார்கள் உடன்பிறப்புகள்.
அன்பில் மகேஷ் முந்திக் கொண்டாலும் நாங்களும் சும்மாவா இருப்போம் என திமுக அமைச்சர்கள் பெரும்பாலானோர் உதயநிதியை அமைச்சராக்கி பார்க்க தங்களுக்கு இருக்கும் ஆசையை ஏதோ ஒரு தருணத்தில் வெளிப்படுத்தாமல் இல்லை.
ஒரு கட்டத்தில் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவை முழுமையாக ஆக்கிரமிக்க, ஓராண்டு கால ஆட்சி முடிந்ததும் அமைச்சராக்கலாம் என தலைமை முடிவு செய்ததாக பேசப்பட்டது. ஆனால் ஏனோ அது தள்ளியும் போனது.
இந்நிலையில் கே.என்.நேரு கலந்து கொண்ட திருச்சி கூட்டத்திலும், அன்பில் மகேஷ் கலந்து கொண்ட மற்றொரு கூட்டத்திலும் உதயநிதியை அமைச்சராக்க தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. திண்டுக்கல்லில் அமைச்சர் பெரியசாமி கலந்து கொண்ட கட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூரிலும் அப்படியே.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சுதாரித்துக் கொண்ட உதயநிதி, தனது சார்பிலும் ஒரு அறிக்கையை கடந்த மே 30 தேதி வெளியிட்டார். அந்த அறிக்கையில் “என் மீதுள்ள அன்பின் காரணமாக எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்குமாறு தீர்மானத்தை நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எந்தச் சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டும் என்பதை கழகமும் தலைமையும் நன்கறியும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்” என கூறியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினும் இந்த அமைச்சர் கோரிக்கையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும் உதயநிதி ஒத்துக் கொண்ட சில சினிமா படப்பிடிப்புகளை முழுமையாக முடித்த பின்னர் இதனை செய்யலாம் என நினைத்தார். இந்நிலையில் கடந்த சில நாள்களாக இதில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டிருப்பதாக நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது.
குறிப்பாக, தனக்கு நெருக்கமான பல்வேறு நபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கருத்துக் கேட்டிருக்கிறார். உளவுத்துறையிடமும் மக்களின் மனநிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருக்கிறார்.
உதயநிதியை அமைச்சராக்கினால் அது கட்சிக்கு பின்னடவை ஏற்படுத்தும் என சர்வேயில் கூறப்பட்டுள்ளதாம். முதல்வரின் ஆலோசகர்களை பொருத்தவரை “ஏற்கெனவே அனைத்து இடங்களிலும் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பலருக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது. அதோடு இன்னும் ஈராண்டுக்குள் நாடாளுமன்ற தேர்தலும் வருகிறது. உதயநிதியை அமைச்சராக்கினால் அதையே எதிர்கட்சிகள் பரப்புரையாக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் கட்சிக்குள் ஆதரவு எதிர்ப்பு கோஷ்டிகளும் உருவாகும் என கூறியிருக்கிறார்கள்.
மேலும் உளவுத்துறை அறிக்கையும் கூட உதயநிதியை அமைச்சராக்குவதை மக்கள் தற்போதைக்கு விரும்பவில்லை என்பதையே சுட்டிக் காட்டியுள்ளதாம். குடும்பத்துக்கு முதல்வர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என மக்கள் நினைக்க வாய்ப்புள்ளது எனவும் அதில் கூறியிருப்பதாக தெரிகிறது.
ஆனால், குடும்பத்தினரோ, எம்.எல்.ஏ. சீட் கொடுக்கும் போதும் இப்படித்தான் சொன்னார்கள், உதயநிதியோ நல்ல வாக்கு வித்தியாசத்தில் வென்று நிருபித்துக் காட்டினார். கடந்த ஓராண்டாக தமிழ்நாடு முழுக்க சென்று கட்சியை வளர்த்தும் வருகிறார். அமைச்சர் பதவி கிடைக்க கூடாது என நினைப்பவர்கள்தான் கொடுக்க கூடாது என முட்டுக் கட்டை போடுகிறார்கள், அதனை கேட்க வேண்டாம், இப்போது அமைச்சாராக்கவிட்டால் எப்போது அமைச்சராக்க முடியும் என அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிகிறது.
இப்படி இரண்டு பக்கமும் இருந்து வரும் அழுத்தத்தில் என்ன செய்வதென தெரியாத முதல்வர் கடும் குழப்பத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *