ஜெ.விடம் மன பாரத்தை இறக்கி வைத்தேன்: சசிகலா

Published On:

| By Balaji

சிறையில் இருந்து கடந்த ஜனவரியிலேயே விடுதலையாகி விட்டாலும் சசிகலா இன்று (அக்டோபர் 16) மெரினா கடற்கரைக்குச் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவிடம் தனது மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டதாக அதன் பிறகு தெரிவித்துள்ளார் சசிகலா.

அதிமுகவின் பொன் விழா ஆண்டு நாளை (அக்டோபர் 17) துவங்கும் நிலையில் ஒரு நாள் முன்னதாகவே இன்று மெரினாவுக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார் சசிகலா.

இன்று காலை 10.35 மணிக்கு தி.நகரிலுள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்ட சசிகலா, அங்கிருந்து சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவரோடு ஜெயா டிவி விவேக்கும் இருந்தார். அங்கிருந்து புறப்பட்டு மெரினா கடற்கரைக்கு சசிகலா வருவதற்கு 12 மணியாகிவிட்டது.

ஜெயலலிதா நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடம், அண்ணா நினைவிடம் ஆகியவற்றில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் சசிகலா. ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நின்றபோது கண்ணீர் மல்க நின்ற சசிகலா, மலர்களை தூவி மலர் வளையம் வைத்து அதில் தலைதாழ்த்தி கசிந்துருகினார்.

பிறகு கடற்கரை வளாகத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார்,

“அம்மாவின் நினைவிடத்துக்கு நான் ஏன் தாமதமாக வந்தேன் என்பது உங்களுக்கும் நன்றாகத் தெரியும். தமிழக மக்களுக்கும் நன்றாகத் தெரியும்.

அம்மாவுடன் நான் இருந்த காலங்கள் என் வயதில் முக்கால் பகுதியாகும். அவர் நம்மை விட்டுச் சென்ற இந்த ஐந்து வருடங்களில் என் மனதில் சுமந்திருந்த பாரத்தை இன்று அம்மாவிடம் இறக்கி வைத்துவிட்டேன்.

தலைவரும் அம்மாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள், தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள். நடந்த விஷயங்களை அம்மாவிடம் சொல்லி நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லிவிட்டுத்தான் வந்தேன். தலைவரும் அம்மாவும் கழகத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

குவிந்திருந்த செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகளைக் கேட்டும் பதிலளிக்காமல் புன்னகையோடு புறப்பட்டுவிட்டார் சசிகலா,. அவரது வருகையை ஒட்டி அதிமுக கொடிகளையே தொண்டர்கள் பிடித்திருந்தனர்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share