நாடாளுமன்ற, சட்டமன்ற கூட்டத் தொடர்களை ஒத்திவைக்க வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடர்ந்து இயங்கி வருகிறது. கூட்டத் தொடரை ஒத்திவைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் திட்டமிட்டபடி நடைபெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுபோலவே தமிழகத்திலும் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறும் நாட்கள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (மார்ச் 21) வெளியிட்ட அறிக்கையில், “நாடாளுமன்ற, சட்டப்பேரவை நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம் என்றாலும், இதனால் மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நோய்த்தொற்று ஆபத்து அதிகரிக்கும் என்பது கவலையளிக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மனிதர்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதாலும் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்தொடர்கள் ஒத்தி வைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்று வரும் தலைநகர் டெல்லி மிகக்குறைந்த நிலப்பரப்பைக் கொண்டது ஆகும். அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் பகுதியாகும். அதன் காரணமாக, நேற்றிரவு வரை 17 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், “இத்தகைய சூழலில் நாடாளுமன்றக் கூட்டம் என்ற பெயரில் இரு அவைகளையும் சேர்த்து 788 உறுப்பினர்கள், அவர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்கள், பணியாளர்கள், பார்வையாளர்கள் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தேவையின்றி டெல்லியில் குவியச் செய்வது கொரோனா நோய்த் தடுப்புக்கான அடிப்படைகளையே தகர்க்கும் செயலாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக சட்டப்பேரவையில் இன்றைய நிலையில் 233 உறுப்பினர்கள் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தலைமைச் செயலகத்திலும், சட்டப்பேரவைச் செயலக வளாகத்திலும் பார்வையாளர்கள் வருகை தடை செய்யப்பட்டிருக்கிறது. அங்குள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினருடனும் குறைந்தது இருவராவது தலைமைச் செயலக வளாகத்திற்கு வருகின்றனர். அமைச்சர்களின் உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் என குறைந்தது 2 ஆயிரம் பேராவது அவை நடைபெறும் நேரத்தில் அந்த வளாகத்தில் இருப்பார்கள்.அதுமட்டுமின்றி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் வளாகத்தில் அவர்களின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்திருப்பார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவதும், ஒழுங்குபடுத்துவதும் கடினம் என்பதால் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும்” என்று கூறியுள்ள ராமதாஸ்,
“கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் அடிப்படையே சமூக இடைவெளிதான். இதற்காக மக்கள் பொது இடங்களில் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்; அவ்வாறு கூடினாலும் ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது 3 அடி இடைவெளி அவசியம் தேவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், நாடாளுமன்ற அவைகளாக இருந்தாலும், தமிழக சட்டப்பேரவையாக இருந்தாலும் மூன்று அங்குல இடைவெளி கூட இல்லாமல் மிகவும் நெருக்கமாகத்தான் உறுப்பினர்கள் அமர்ந்திருக்க வேண்டும். மையப்படுத்தப்பட்ட குளிரூட்டி வசதி கொண்ட அவைகளில் வைரஸ் எளிதில் பரவக்கூடும் என்பதால், மக்கள் பிரதிநிதிகளின் நலன் கருதி அவை நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “பிரதமர் மற்றும் முதல்வரின் பொறுப்புணர்வே நாடாளுமன்றம், மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் நோய் தொற்றுவதற்கும், அவர்களை சார்ந்தவர்கள் கூடுவதால் நோய் பரவுவதற்கும் வழிவகுத்துவிடக் கூடாது. எனவே, நாடாளுமன்றம் மற்றும் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கும்படி பிரதமரும், தமிழக முதல்வரும், அவைத் தலைவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
**எழில்**�,