vமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

Published On:

| By Balaji

ஊரடங்கு நேரத்திலும் மகாராஷ்டிர அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில்… இன்று (மே 25) தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அம்மாநில ஆளுநர் பி.எஸ். கோஷ்யாரியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரத் பவாருக்குப் பிறகு அம்மாநில முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான நாராயன் ரானே இன்று மாலை 4.30க்கு மாநில ஆளுநரை சந்தித்துள்ளார். அடுத்தடுத்து இரு சந்திப்புகளால் மகாராஷ்டிர அரசியல் மீண்டும் தேசிய கவனம் பெற்றுள்ளது.

கொரோனா தொற்றில் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் மாநில அரசு முறையாக செயல்படவில்லை என்று பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிரா ஆளுநர் பி எஸ் கோஷ்யாரியை ராஜ் பவனில் இன்று பகல் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சரத் பவாருடன் அக்கட்சியின் மூத்த தலைவர் ப்ரஃபுல் பட்டேலும் இருந்தார்.

சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ப்ரஃபுல் படேல், “ஆளுநர் கோஷ்யரியின் வேண்டுகோளின் பேரில் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு” என்று கூறினார். ஆளுநருடன் ஏதேனும் அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதித்தீர்களா என்று கேட்டதற்கு, “இது அவர்களுக்கு இடையேயான ஒரு வழக்கமான சந்திப்பு. இது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் பிரச்சினை பற்றியும் அல்ல” என்றார்.

மாநில நிர்வாகத்தின் செயல்பாட்டில் ஆளுநரின் தலையீடு குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டி வந்தார் பவார். இந்நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

சரத் பவாரைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வரும் பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவருமான நாராயன் ரானே ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று (மே 25) மாலை 4.30க்கு சந்தித்தார். எல்லாவகையிலும் தோல்வியுற்ற மகாராஷ்டிர மாநில அரசில் மத்திய அரசு தலையிட வேண்டுமென்றும், மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்றும் ரானே ஆளுநரிடம் வலியுறுத்தியதாக ஏ.என். ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சந்திப்பு பற்றி ரானே கூறுகையில், “உத்தவ் தாக்கரே தனது வாக்குறுதிகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றவில்லை. இதுவரை அனைத்து உதவிகளும் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஆனாலும், இந்த அரசாங்கம் நிலைமையைக் கையாளத் தவறிவிட்டது. தற்போதைய அரசாங்கம் ஒரு குழப்பத்தில் உள்ளது. குறிப்பாக கொரோனா நோயாளிகளின் நிலைமை கையை மீறி போய்விட்டது. எனவே, மத்திய அரசு தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று அவர் கோரினார். “முதலமைச்சருக்கு அரசாங்கத்தை நடத்தும் திறன் இல்லை. மாநிலத்திற்கு வருவாயை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்து எந்த திட்டமும் அவரிடம் இல்லை” என்றும் அவர் உத்தவ் தாக்கரேவை கண்டித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாநிலம் முழுதும் பாஜக உத்தவ் தாக்கரே அரசைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்திய நிலையில், இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது பாஜக.

கடந்த 2019 நவம்பர் மாதத்தில் பதவியேற்ற உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்ட்டணி அரசு இப்போதுதான் ஆறு மாதத்தை முடித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share