புதுச்சேரியில் படிப்படியாக மதுவிலக்கு: நாராயணசாமி

Published On:

| By Balaji

புதுச்சேரியில் படிப்படியாக மது விற்பனையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும், 2 நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கு புதுச்சேரியில் நேற்று (பிப்ரவரி 19) துவங்கியது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதல்வர் நாராயணசாமி, “பள்ளி அருகில் உள்ள கடைகளில்தான் குட்கா விற்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்த அரசுக்கு எவ்வளவு கடமை உள்ளதோ? அதே அளவு ஆசிரியர்களுக்கும், சமூகத்திற்கும் உள்ளது. மாணவர்களுடன் அதிக நேரம் செலவழிப்பவர்கள் ஆசிரியர்கள்தான். புதுச்சேரி போதை மறுவாழ்வு மையங்கள் பல இடங்களில் தொடங்கி உள்ளனர்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக மதுவை ஒழிக்க முடியவில்லை. மதுவை ஒழித்தால் அரசிடம் பணம் இருக்காது. மத்திய அரசிடம் பணம் கேட்டால் தரமாட்டேன் என்கிறார்கள். அரசின் வருமானத்தை பெருக்க வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதுச்சேரி சிறு மாநிலம் என்பதால் விற்பனை வரி, மது விற்பனை, பத்திரப் பதிவு, வாகன வரி ஆகியவை மூலமாகவே வருமானம் வருகிறது. கனிம வளங்களும் எதுவும் கிடையாது. ஆகவே, மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்று தெரிவித்த நாராயணசாமி,

மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பெற்றோர்கள் பாதிக்கப்படுவார்கள். மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுப்பது ஆசிரியரின் கடமை. இந்த கருத்தரங்கில் பெறும் பயனுள்ள தகவல்களை கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share