இளநீர் விற்று அரசுப் பள்ளிக்கு உதவி செய்த திருப்பூரைச் சேர்ந்த தாயம்மாள் என்பவரைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் வசிக்கும் தாயம்மாள் என்ற பெண் இளநீர் விற்று வருகிறார். இவரது குடும்பத்திற்கு வருவாய் ஆதாரமே இளநீர் விற்று வரும் பணம் தான். இந்த சூழலில் தாயம்மாள் திருப்பூர் சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியின் உள்கட்டமைப்புக்காக ரூ. 1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, 85-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். இது 2022ஆம் ஆண்டின் முதல் நிகழ்ச்சியாகும்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைப்பேட்டையில் வசிக்கும் தாயம்மாளின் எடுத்துக்காட்டு மிகவும் கருத்தாக்கம் அளிப்பதாக இருக்கிறது.
தாயம்மாளுக்கு சொந்தமாக எந்த நிலமும் இல்லை. பல ஆண்டுகளாக இவருடைய குடும்பம் இளநீர் விற்றுத் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறது. பொருளாதார நிலை சரியாக இல்லாத நிலையிலும், தாயம்மாள் தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை. இவருடைய பிள்ளைகள் சின்னவீரன்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் படிக்கின்றனர். இந்த நிலையில், பள்ளியில் காப்பாளர்களோடு நடந்த ஒரு கூட்டத்தில், வகுப்புகள் மற்றும் பள்ளியின் நிலையைச் சீர் செய்ய வேண்டும், பள்ளியின் கட்டமைப்பைச் சீர் செய்ய வேண்டும் என்ற விஷயம் விவாதிக்கப்பட்டது. தாயம்மாளும் அந்தக் கூட்டத்தில் பங்கெடுத்திருந்தார். அனைத்தையும் கேட்டார். இதே கூட்டத்தில் விவாதம் தொடர்ந்த போது, அனைத்தும் பணத்தட்டுப்பாடு காரணமாகத் தடைப்பட்டுப் போனது. இதன் பிறகு தாயம்மாள் அவர்கள் செய்த விஷயத்தை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. எந்தத் தாயம்மாள் இளநீர் விற்று தன் வயிற்றுப் பிழைப்பை நடத்தி வந்தாரோ, தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த ரூ. 1 லட்சத்தை பள்ளிக்குக் கொடையாக அளித்தார். உண்மையிலேயே இப்படிச் செய்ய மிகப்பெரிய மனது வேண்டும், சேவையுணர்வு வேண்டும். இப்போது பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை தான் படிக்க முடிகிறது. ஆனால், பள்ளியின் கட்டமைப்பு மேம்பட்டால், இங்கே உயர்நிலைக்கல்வி வரை படிக்க முடியும் என்று தாயம்மாள் கூறினார். நமது தேசத்தின் கல்வி தொடர்பாக இருக்கும் இந்த உணர்வு பற்றித் தான் நான் பேசிக் கொண்டிருந்தேன் என்று திருப்பூர் பெண்ணை எடுத்துக்காட்டாகக் கூறி பேசினார் பிரதமர் மோடி.
**-பிரியா**
�,