தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், பிரிட்டனில் 160 பேருக்கும், இந்தியாவில் 21 பேருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா, குஜராத்,டெல்லி,ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் ஊடுருவி விட்டதோ என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 6) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”ஒமிக்ரான் பாதிப்பு இருக்கக் கூடிய ரிஸ்க் நாடுகள் என்று பட்டியலிடப்பட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடைபெறுவதை கண்காணிப்பு மூலம் உறுதி செய்து வருகிறோம். அந்த வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஒமிக்ரான் இருக்குமோ என்ற அச்சம் காரணமாக அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில், 6 பேருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு எந்த அறிகுறியும் இல்லாததால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு கும்பகோணத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதனால் தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரிஸ்க் நாடுகளில் இருந்து இதுவரை 28 விமானங்கள் வந்துள்ளன. ஹை ரிஸ்க் மற்றும் நான் – ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 5,858 பேருக்கு இதுவரை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடித்தாலே நோய் பாதிப்பு வராமல் தடுக்கலாம், நோய் வந்தாலும் மீண்டு விடலாம்” என்று தெரிவித்துள்ளார்.
**தடுப்பூசி இயக்கத்தின் மற்றொரு மைக்கல்**
உலகநாடுகளை ஒமிக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணியினை தீவிரப்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில்,”இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸையும் முழுமையாக செலுத்திக் கொண்டனர். இதன்மூலம் நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 127.61 கோடியைத் தாண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ஒன்றிய சுகாதாரத் துறையின் ட்வீட்டை ரீட்விட் செய்த பிரதமர் நரேந்திர மோடி, 50% இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் மூலம் இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் மற்றொரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த இந்த வேகத்தைத் தக்க வைத்துக்கொள்வது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக கூடுதல் டோஸ் தடுப்பூசி போடலாமா என்பது குறித்து இன்று நிபுணர் குழு ஆலோசனை நடத்துகிறது.
இந்நிலையில் ஒமிக்ரான் குறித்து ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அமெரிக்கத் தேசிய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் ஆண்டனி பவுசி கூறுகையில்,”ஒமிக்ரான் வைரஸ் உலக நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது. இருப்பினும், தற்போது வரை நம்மிடம் உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும்போது இந்த வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒமிக்ரான், டெல்டாவை விட தீவிரம் குறைந்ததாகவே காணப்படுகிறது. இருப்பினும் முழுமையான தகவல்கள் தேவைப்படுகின்றன. முழுமையான ஆய்வுக்கு பின்னரே ஒமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்த கூடியதா, இல்லையா என்பது தெரியவரும். அதனால், அதுவரை அதிக கவனத்துடன் இருப்பது நல்லது” என்று கூறினார்.
**-வினிதா**
�,”