அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தால் நிலை குலைய வைத்தது. இதற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மட்டும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் கொரோனா வைரஸ் தாக்கி அதிலிருந்து மீண்டனர்.
அமைச்சர் துரைக்கண்ணு, மக்களவை உறுப்பினர் வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொரோனாவிலிருந்து மீளமுடியாமல் உயிரிழந்தனர். சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த வாரத்தில் நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கும் குறைவாகவே பாதிப்பு இருந்தது.
திருவாரூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். இந்த நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை மணப்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் காமராஜ்.
அவரை நலம் விசாரித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்பவும், தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன், தங்கமணி, நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
*எழில்*�,