கட்டாய உரத் திணிப்பு: மின்னம்பலம் செய்திக்கு அரசு உடனடி ஆக்ஷன்!

Published On:

| By admin

விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடாக இருக்கும் நிலையில், கிடைக்கும் உரத்தை வாங்குவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து மின்னம்பலத்தில்,
[விவசாயிகளிடம் கட்டாய உரத் திணிப்பு: ஆக்ஷன் எடுப்பாரா முதல்வர்?](https://minnambalam.com/politics/2022/03/28/18/Compulsory-fertilizer-dumping-to-farmers-Will-the-ChiefMinister-take-action) என்ற தலைப்பில் மார்ச் 28ஆம் தேதி காலை பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உரம் வாங்க போகும் விவசாயிகளிடம் இயற்கை உரம் (ஆர்க்கானிக் உரம்) என்ற பெயரில் சில பொருட்களை வலுக்கட்டாயமாக திணித்து வருகின்றனர் என்ற செய்தியை விரிவாகவும், விவசாயி ஜானகியின் கண்ணீர் பேட்டியையும் பதிவு செய்திருந்தோம்.

நமது செய்தி வெளியானபோது முதல்வர் வெளிநாட்டில் இருந்த போதும், செய்தி வெளியான 90 நிமிடங்களில் முதல்வர் அலுவலகத்திலிருந்து நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வேளாண் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி ஐஏஎஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து தொடர்புகொண்டு மின்னம்பலம் செய்தியை சுட்டிக் காட்டி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி அனைத்து மாவட்ட உர கள ஆய்வு அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படியே உர கள ஆய்வு அதிகாரிகள் மற்றும் மண்டல மேலாளர், சொசைட்டி செகரட்ரிகள் என ஆய்வில் இறங்கினார்கள்.

மின்னம்பலத்தில் இந்த செய்தி வெளியான மூன்று மணி நேரங்களில் அதாவது மார்ச் 28 காலை 11 மணிக்கு கடலூர் மாவட்ட உர கள ஆய்வு அதிகாரி, உதவி இயக்குனர் நடனசபாபதி உள்ளிட்டோர் அண்ணாகிராமம் ஒன்றியம் மேல்குமாரமங்கலம் கூட்டுறவு சொசைட்டியில் விசாரித்தனர்.

மின்னம்பலத்திடம் பேட்டி கொடுத்த ஜானகி வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரித்தனர். பிறகு நாம் செய்தியில் குறிப்பிட்டிருந்த தனியார் உரக்கடையான சுப ஸ்ரீ செல்வவிநாயகர் கடைக்கு சென்று விசாரித்தனர் அதிகாரிகள். அருகில் இருந்த சீனுவாசன் செட்டியார் கடையிலும் விசாரித்தார்கள்.

மீண்டும் நேற்று மார்ச் 29 ஆம் தேதி உரத் துறை மண்டல அதிகாரி சுரேஷ் குப்தா தலைமையில் தனியார் உரக் கடைகள் கூட்டுறவு சொசைட்டி மற்றும் பேட்டி கொடுத்த ஜானகியை மீண்டும் சந்தித்துள்ளார்கள்.

நமது செய்திக்கான ரியாக்ஷன் பற்றி நம்மிடம் பேட்டி கொடுத்த ஜானகியிடம் பேசினோம்.

“நேற்று முன்தினம் என் வீட்டுக்கு வந்த அதிகாரிகள் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்கள். உங்களிடம் சொன்னதை அவர்களிடமும் சொன்னேன். யூரியா இல்லை என்றால் இந்த எண்ணுக்கு கூப்பிடுங்கள், சப்ளை செய்கிறோம், இனி யாரும் கட்டாயப்படுத்தி எந்த மருந்தும் கொடுக்க மாட்டார்கள்’ என்று உறுதி கொடுத்தார்கள்.

திரும்ப நேற்றும் வந்த அதிகாரிகள் யூரியா வாங்கிய பில் இருக்கா என்று கேட்டார்கள். அவர்கள்தான் பில் கொடுப்பது இல்லை, துண்டு சீட்டில்தான் எழுதி கொடுத்தார்கள் என்று சொன்னேன். சொசைட்டி மற்றும் தனியார் கடையிலும் ஆர்க்கானிக் உரம் வாங்கினால்தான் மற்ற உரம் கொடுக்கப்படும் என்று நிர்பந்திப்பதையும் அதிகாரிகளிடம் எடுத்துச் சொன்னேன். அப்படி என்றால் சுப ஸ்ரீ செல்வவிநாயகர் கடையில் யூரியா கொடுக்க மறுக்குகிறார்கள் என்று எழுதி கொடுங்கள், அந்த கடை மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொன்னார்கள். ‘சார் நாங்க இந்த ஏரியாவிலேயே இருக்கோம். எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது’ என்று சொல்லி நான் எழுத்துபூர்வமாக புகார் கொடுக்கத் தயங்கினேன். அதற்கு அதிகாரிகள், ‘சரி…இனி யூரியா தட்டுப்பாடும் இருக்காது. எக்ஸ்ட்ரா உரத்தை உங்கள் தலையில் கட்டுவதும் நடக்காது’ என்று உறுதி கொடுத்துட்டு போனார்கள். ஒரு பத்திரிகை செய்திக்கு இவ்வளவு சீக்கிரம் ஆக்ஷன் எடுத்து நான் பார்த்ததில்லை சார்” என்றார் ஜானகி வியப்பாய்.

அடுத்ததாக சுப ஸ்ரீ செல்வவிநாயகர் கடைக்கு சென்று உரிமையாளர் செந்தில் குமாரிடம் விசாரித்தோம்.

” வாங்க வாங்க சார். இப்போதான் விமோசனம் பிறந்துள்ளது. பூனைக்கு யார் மணி கட்டுவது என இருந்தது விவசாயிகளுக்கு நல்லது செய்திருக்கீஙக. எங்கள் கடைக்கு அதிகாரிகள் வந்து விசாரித்தார்கள். செல்போனில் வீடியோவும் எடுத்தார்கள் உள்ளதை உள்ளபடியே சொன்னேன்.

பாக்டம்பாஸ் என்ன விலைக்கு விற்பனை செய்யறீங்க என்று கேட்டார். மூட்டை 1450 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன் என்றேன். எம். ஆர். பி 1390 ரூபாய்தானே… ஏன் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யறீங்க என்று கேட்டார். நடைமுறை சிக்கல்களை சொல்லியிருக்கிறேன்” என்றார்.

அத்தோடு விடாத உரத் துறை ஆய்வு அதிகாரிகள் அருகில் உள்ள சீனுவாசன் செட்டியார் உரக் கடைக்கும் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

நாம் செய்தியில் குறிப்பிட்டிருந்த கடலூர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று முன்தினமும் நேற்றும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது.

இதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை நேற்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

“தமிழ்நாட்டிற்கு பயிர் சாகுபடிக்கு தேவைப்படும் மானிய உரங்களான யூரியா, டிஏபி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு சில்லறை உர விற்பனையாளர்கள் உலக நேரடி பயன் பரிமாற்றம் வழிகாட்டுதல் முறைகளை பின்பற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மானிய உரங்களை விற்கும் சமயம் சில உர விற்பனையாளர்கள் விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடு பொருட்களையும் வாங்க வேண்டுமென கட்டாயப்படுத்தி விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகள் கூடுதலாக செலவு செய்யும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

உர விற்பனையாளர்கள் விவசாயிகள் கேட்கும் மானிய உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். வேறு இடுபொருட்களை விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது.

எனவே இத்தகைய விற்பனை உரத்தட்டுப்பாடு ஆணை 1985க்கு புறம்பான செயலாகும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக இதர இடுபொருட்களை வலுக்கட்டாயமாக விற்பனை செய்யும் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமங்கள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இதுபோன்ற விதிமீறல்கள் செய்யும் உர விற்பனையாளர்கள் குறித்த புகார்களை மாநில உர உதவி மைய கைப்பேசி எண் 936 34 40360 மற்றும் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அவர்களிடம் தெரிவிக்கும்படி வேளாண் பெருங்குடி மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்” என்று வேளாண்மை இயக்குனர் மார்ச் 28ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மின்னம்பலம் செய்தியின் விளைவாக இந்த அரசு அறிவிப்பு உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது. அறிவிப்பில் இருக்கும் விவரங்களை தீவிரமாக செயல்படுத்தினால் மட்டுமே விவசாயிகள் கட்டாய உரத் திணிப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

**வணங்காமுடி**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share