திமுகவுடன் கூட பாஜக கூட்டணி அமைக்கும்: பொன்.ராதா

Published On:

| By Balaji

சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துவிட்டன. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவித்துவிட்டார்.

ஆனால், தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியின் வேட்பாளர் குறித்து தேர்தல் நேரத்தில்தான் பேசுவோம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த நிலையில் நாகர்கோயிலில் இன்று (அக்டோபர் 7) செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பான இன்னொரு கருத்தையும் கூறியிருக்கிறார்.

கூட்டணி பற்றிய கேள்விக்கு, “தற்போது இருக்கும் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. இனிதான் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அமைக்கப்படும். அந்தக் கூட்டணி அதிமுகவுடன் இருக்கலாம், திமுகவுடன் கூட இருக்கலாம். இரண்டும் இல்லாமல் நாங்களே ஒரு கூட்டணியைக் கூட அமைக்கலாம். அனைத்து அம்சங்களுக்கும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை மாநிலத் தலைவர்கள் என்ன பேசினால், தேசியத் தலைவர்கள் எடுப்பதே இறுதி முடிவு என்றார்.

ஏற்கனவே திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், “தற்போது தங்களுடன் உள்ள கட்சிகள் சீட்டை காரணம் காட்டி கூட்டணியிலிருந்து வெளியேறலாம். புதிய கட்சிகள் கூட்டணி வரலாம். வேட்புமனு தாக்கல் முடியும்போதுதான் யாருடன் யார் கூட்டணியில் இருக்கிறார்கள் எனத் தெரியும்” எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**எழில்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share