அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தால் 1,500 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொள்ள முடியும். மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்கவும் முடியும். ஆகவே, பல்கலைக் கழகத்திற்கு உயர் அந்தஸ்து வழங்க வேண்டும் எனத் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்றும், அதற்கான உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்றும் முக்கிய முடிவை எடுத்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதத் துணைவேந்தர் சூரப்பா என்ன மாநிலத்தின் மற்றொரு முதலமைச்சரா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
69% இடஒதுக்கீடு குறித்து மத்திய பாஜக அரசு எந்த உத்தரவாதமும் அளிக்காத நிலையிலும், உயர் சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுகிறார். இதற்கு ரகசிய அனுமதி அளிக்கத்தான் ஆளுநரைச் சந்தித்தாரா முதலமைச்சர் பழனிசாமி என்று சாடிய அவர்,
“அண்ணா பல்கலைக் கழகத்தை காவிமயமாக்க முதலமைச்சர் – ஆளுநர் – துணைவேந்தர் கூட்டணியா?துணைவேந்தர் கடித விவகாரத்தில் அதிமுக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், திமுக இளைஞரணி, மாணவரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என எச்சரித்துள்ளார்.
ஸ்டாலினின் இந்த அறிக்கையால் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மகிழ்ச்சியில் இருப்பதாக உயர்கல்வித் துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
சூரப்பா நியமனத்தின்போதே மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதா? தமிழகத்தில் துணை வேந்தர் பதவிக்கு ஆளே இல்லையா என்றெல்லாம் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமித்தார்.
அதன்பிறகு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் சூரப்பாவிற்கு பல்வேறு விவகாரங்களில் கருத்து ஒற்றுமை இல்லாமல் இருந்துவந்தது. சூரப்பா தனக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அன்பழகன் பலமுறை கூறிவிட்டார்.ஆனால், இதுபற்றி தான் ஆளுநரிமே பேசிவிட்டதாகவும், அதற்கு பெரிய அளவில் பலனேதுமில்லை என அவரிடம் முதல்வர் சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் சூரப்பா மீதான தன்னுடைய குற்றச்சாட்டுக்களுக்கு வலுசேர்க்கும் விதமாக ஸ்டாலின் அறிக்கை விடுத்தது அமைச்சருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் உயர்கல்வித் துறையினர்.
**எழில்**�,