அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி அமமுக தேர்தலில் போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
நேற்று (மார்ச் 3) சசிகலாவின் அறிவிப்புக்குப் பின் அவரது இல்லத்து வாசலில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் விருப்பம். ஆனால் ஒற்றுமைப்படுவதற்கு வாய்ப்பில்லையோ என்ற எண்ணத்தில் அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். சசிகலாவின் முடிவு வருத்தமளிக்கிறது.
அவரது அறிவிப்பு எனக்கு சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. நான் மாலை வரை இருந்தேன். என்னிடம் ஏதும் சொல்லவில்லை. மீண்டும் இரவு வந்தபோது இந்த அறிக்கையை என்னிடம் கொடுத்தார்கள். நான் அவரை வேண்டாமென்று அரைமணி நேரம் சொல்லிப் பார்த்தேன். நீங்கள் ஏன் ஒதுங்கி செய்ய வேண்டும், இருந்து செய்யுங்கள் என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர், இதான்ப்பா சரியான முடிவு என்று என்னிடம் சொல்லிவிட்டார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் நியாயம் கேட்ட 18 எம்.எல்.ஏ.க்களால் உருவானது. நான் எங்கள் தலைமையில் கூட்டணி அமைக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். நேற்று எங்களுக்காக அதிமுகவை பாஜக நிர்பந்திப்பதாக கூறினார்கள். ஆனால், இன்று பாஜகவின் நிர்பந்தத்தின் பேரில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கினாரா என்று என்னிடம் கேட்பது என்ன நியாயம்?
சசிகலா சிறையில் இருக்கும்போது நாங்கள் கட்சி ஆரம்பித்தோம். நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தோம். எங்கள் மையப் பொருள் சசிகலா இல்லை.
அமமுக தலைமையில் அமையும் கூட்டணியால் நாங்கள் திமுகவை தோற்கடிப்போம். அமமுக நிர்வாகிகளோடு பேசி இதுபற்றி முடிவெடுப்போம். நாங்கள் ஜனநாயக ரீதியாக அதிமுகவை மீட்கப் போராடுகிறோம்.
அமமுக தலைமையில் கூட்டணி பற்றி பேசி வருகிறோம். இன்றுகூட விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கிவிட்டோம். நான் உள்ளிட்ட பலரும் போட்டியிட வேண்டும் என்று பலர் மனு கொடுத்திருக்கிறார்கள். 10ஆம் தேதி நாங்கள் வேட்பாளர் பட்டியல் அறிவிக்க இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் தினகரன்.
ஆனால், நேற்று இரவு தன்னை சந்தித்த தினகரனிடம் சசிகலா, “வரும் சட்டமன்றத் தேர்தலில் நீ போட்டியிடக் கூடாது” என்று உத்தரவிட்டிருக்கிறார். இதற்குப் பதில் கொடுக்கும் விதமாகத்தான்,
“எங்கள் மையப் பொருள் சசிகலா அல்ல. எங்கள் பொதுக்குழுவில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது பற்றி சசிகலாவே டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டார். அதுபற்றியெல்லாம் அவர் கேட்க மாட்டார். அமமுகவின் வேட்பாளர் பட்டியலை 10ஆம்தேதி நாங்கள் வெளியிடுவோம்” என்று தினகரன் கூறியிருக்கிறார் என்று அமமுக வட்டாரத்தில் கூறியுள்ளனர்.
**-வேந்தன்**
�,