பிரதமர் மோடியை இன்று ஜனவரி 19 சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது… சசிகலா தினகரன் விவகாரத்தில் முக்கியமான சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.
சசிகலா அதிமுகவில் உறுப்பினரே இல்லை. அவர் மீண்டும் அதிமுகவில் சேர 100% வாய்ப்பே இல்லை. அதுபோல தினகரனை ஜெயலலிதா இருக்கும்போதே கட்சியில் இருந்து நீக்கி விட்டார். அவரிடமிருந்து பல நிர்வாகிகள் இங்கே வந்துவிட்டார்கள். சிலர்தான் அவரோடு இருக்கிறார்கள். அவர் அதிமுகவுக்கு வர வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாக டெல்லியில் தெரிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு விஷயமாக, ‘இந்த சந்திப்புகளில் அரசியலே பேசப்படவில்லை. தமிழகத்தின் வளர்ச்சி பற்றிதான் பேசினோம்”என்றும் கூறியிருக்கிறார் முதல்வர்.
ஆனால், நேற்று (ஜனவரி 18) இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பிலும் சரி…இன்றைய பிரதமருடனான சந்திப்பிலும் சரி எடப்பாடி பழனிசாமி அரசியல் பேசாமல் இல்லை.
இதுபற்றி டெல்லி வட்டாரத்தில் விசாரித்தோம்.
“சில தினங்களுக்கு முன்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லிசென்றதாகவும் அங்கே சில பாஜக தலைவர்களைப் பார்த்ததாகவும் அமமுக வட்டாரங்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டுச் சென்றநிலையில் டிடிவி தினகரன் ஆரோவில் பண்ணை வீட்டிலும் இல்லை, சென்னையிலும் இல்லை அவரும் டெல்லி சென்றுவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் ஒரு தகவல் பரவியது.
இந்த பரபரப்புக்கு இடையில்தான் நேற்று அமித் ஷாவை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகம் பற்றிய கோரிக்கைகளுக்குப் பிறகு இருவருமே அரசியல் பேசியிருக்கிறார்கள். குறிப்பாக அமித் ஷாவே இதை ஆரம்பித்திருக்கிறார்.
’திமுகவுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வருவது போலத்தான் எனக்கு வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் நாம் நமது வியூகத்தை மாற்றினால் என்ன… அமமுகவை அதிமுகவோடு இணைப்பதெல்லாம் இப்போது வேண்டாம். அந்த அம்மா(சசிகலா) என் கட்சி அதிமுக, என் சின்னம் இரட்டை இலைதான் என்றெல்லாம் சிறையில் சொல்லி வருகிறார். எனவே அமமுகவையும் நமது கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் திமுகவுக்கு எதிரான வலுவான அணி அமைக்க முடியுமே… இல்லையென்றால் அமமுகவினர் தொகுதிக்கு சில ஆயிரம் வாக்குகளைப் பிரிக்க மாட்டார்களா? எனவே அமமுகவை நமது கூட்டணிக்குள் சேர்த்து, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகள் உள்ளிட்ட சில தொகுதிகளை அவர்களுக்குக் கொடுத்தால் என்ன?’என்று நேரடியாகவே கேட்டிருக்கிறார். திமுகவில் இருந்து பிரிந்த மதிமுக இப்போது திமுக அணியில் இல்லையா என்றும் கேட்டுள்ளார் அமித் ஷா.
இதை எதிர்பார்த்த எடப்பாடி பழனிசாமி தான் கொண்டு சென்றிருந்த சில ஃபைல்களை அமித் ஷாவிடம் காட்டியிருக்கிறார். அதாவது 1977 தேர்தலில் இருந்து 2016 தேர்தல் வரையிலான தமிழகத்தில் நடந்த அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக எட்டுமுறை, ஏழுமுறை தொடர்ந்து ஜெயித்து வரும் தொகுதிகள் பட்டியலைக் காட்டிய எடப்பாடி…’தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதாவுக்கு நிகராக மக்கள் மனதில் பதிந்தது இரட்டை இலை சின்னம். இரட்டை இலை சின்னம்தான் வெற்றிக்கு அடிப்படை.அந்த வகையில் பார்த்தால் அந்த 18 பேரும் இரட்டை இலை சின்னத்தில்தான் ஜெயித்தார்கள். தினகரன், சசிகலாவை விடஎங்களுக்கு இரட்டை இலையே முக்கியம். எனவே அவர்கள் இல்லாமலும் இந்தத் தேர்தலில் நம்மால் சிறப்பாக வெற்றிபெற முடியும். அவர்கள் வந்தால் வீண் பிரச்சினைகள்தான் வரும். கீழ் நிலை நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்கள் வருவதை விரும்பவில்லை. எனவே அந்த யோசனையை நாம் கைவிட்டுவிடலாம்’ என்று பதிலளித்திருக்கிறார். அமித் ஷாவும் நான் இது தொடர்பாக மோடியிடமும் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
இப்படியாக நேற்று அமித் ஷாவையும், இன்று மோடியையும் சந்தித்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமி…இன்று செய்தியாளர்களிடம், ‘சசிகலா, தினகரன் அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை’என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
எடப்பாடியின் இந்த யோசனைக்கு அமித் ஷா சம்மதம் தெரிவித்துவிட்டாரா என்பது பாஜகவின் அடுத்தடுத்த மூவ்களில் தெரிந்துவிடும்.
**-ஆரா**�,”