தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 8) சிவகங்கை மாவட்டம், காரையூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்தார். கோட்டை வேங்கைப்பட்டியில் நடைபெற்ற பெரியார் நினைவு சமத்துவபுரத்தைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எஸ். ரகுபதி, ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கலைஞரின் கனவுத் திட்டங்களில் ஒன்று தான் சமத்துவபுர திட்டம். 1997ஆம் ஆண்டு தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரத்தினை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களைக் கட்டி, சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு புதிய ஒளியைக் காட்டினார்.
சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 9 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டது. அதில், 8 சமத்துவபுரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, நாம் ஆட்சிப் பொறுப்பில் அன்றைக்கு இருந்தபோதே அது வழங்கப்பட்டது அமைச்சர் பெரியகருப்பன் சொன்ன மாதிரி, இந்த கோட்டை வேங்கைப்பட்டி சமத்துவபுரமும் முன்கூட்டியே செயல்பட்டிருக்க வேண்டும்.
இந்த கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு 2010-2011-ஆம் நிதியாண்டில் அனுமதி அளிக்கப்பட்டது. 207 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் காரணமாக, இந்தச் சமத்துவபுரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை.
இந்த நிலையில்தான் திமுக அரசு அமைந்ததற்குப் பிறகு, 317 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழுமையாகச் சரிசெய்யப்பட்டு, பழுது பார்க்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு இன்றைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மக்களுக்கான திட்டங்களைக் கடந்த அ.தி.மு.க. அரசு எப்படியெல்லாம் பாழ் படுத்தியது என்பதற்கு இந்த விழாவைச் சாட்சியாக நீங்கள் பார்க்கலாம். கடந்த ஆட்சியானது மக்களுக்கான ஆட்சியாக இல்லாமல், அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சியாக இருந்த காரணத்தால் தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்” என்று குறிப்பிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கோட்டை வேங்கைப்பட்டி சமத்துவபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்துப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும், கடைக்கோடியில் இருக்கக்கூடிய குடிமகனுக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய இலட்சியம், அரசினுடைய நோக்கம்.
அரசின் திட்டங்களின் பயன் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்று சேர்வதை நம்முடைய அரசு உறுதி செய்யும். இங்கே அமர்ந்துள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும் அதனை நாள்தோறும் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்.
சட்டமன்றத் தேர்தல் நேரத்திலிருந்ததைவிட, இப்போது அதிகமான அளவு, மூன்று மடங்கு, நான்கு மடங்கு எழுச்சி இன்றைக்கு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. காரணம் என்ன? மக்களுக்கு மிகமிக உண்மையாக இருப்பது, மக்களுக்கு நேர்மையான ஆட்சியை வழங்குவது தான் இதற்கு முக்கியக் காரணம்.
தேர்தலுக்கு முன்னால், எப்படி மக்களைச் சந்தித்து வந்தேனோ, அதைவிட அதிகமாகவே இப்போது நான் மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மக்களைத் தொடர்ச்சியாகச் சந்திப்பது, ஆட்சியாளர்களின் மிக முக்கியமான இலக்கணமாக நான் கருதுகிறேன்.
அண்மையில் நடந்த கலைஞரின் சிலை திறப்பு விழாவுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை அழைத்திருந்தோம். அவரும் மகிழ்ச்சியோடு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். எந்தவகையில் எல்லாம் சிறப்பாகக் கலைஞர் ஆட்சி நடத்தினார்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டிப் பெருமைப்படுத்திப் பேசினார். அதோடு நிற்காமல், ‘முத்தமிழறிஞர் கலைஞர் வழித்தடத்தில் இப்போதைய முதலமைச்சரும் ஆட்சி நடத்தி வருகிறார்’ என்று அவர் குறிப்பிட்டது தான். நமக்குப் பெருமை, என்னுடைய வாழ்வில் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பாராட்டாக நான் கருதுகிறேன்.
இந்தியாவின் பல்வேறு மாநில முதலமைச்சர்களை அறிந்த குடியரசுத் துணைத் தலைவர் , என்னைப் பாராட்டி, கலைஞர் போலத் திறமையாக ஆட்சி நடத்துகிறேன் என்று ஒப்பிட்டுச் சொன்னது, எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகமிகப் பெரிய பாராட்டாகக் கருதுகிறேன்.
கலைஞர் இருந்த இடத்தை நான் நிரப்பிவிட்டேன் என்று சொல்லவில்லை. அவரது இடத்தை யாராலும், எந்தக் கொம்பனாலும் நிரப்பிட முடியாது. ஆனால் அவரைப் போலச் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஓராண்டுக்காலமாக என்னுடைய செயல்பாடு அமைந்துள்ளது. தமிழ்நாடு நம்பர் 1-க்கு வர வேண்டும், அது தான் என்னுடைய லட்சியம். குடியரசுத் துணைத் தலைவரின் பாராட்டு அதனைத்தான் வெளிப்படுத்துகிறது.
‘தமிழ்ச் சமுதாயத்துக்கு என்னால் முடிந்தவரை உழைத்துவிட்டேன். எனக்குப் பிறகு யார் என்று கேட்டால், தம்பி ஸ்டாலின்தான்’ என்று கலைஞர் ஒரு முறை சொன்னார். அந்த நம்பிக்கையை இந்த ஓராண்டுக்காலத்தில் நான் காப்பாற்றி இருக்கிறேன். இனியும் தொடர்ந்து நான் காப்பாற்றுவேன்! அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஐந்து ஆண்டுகளில் செய்யவேண்டியதை இந்த ஓராண்டு காலத்தில் செய்திருக்கிறோம். இது ஏதோ ஆரம்பக் கட்ட வேகம் என்று நீங்கள் நினைக்கலாம் -எல்லோரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் இதே சுறுசுறுப்புடனும், இதே வேகத்துடனும் தான் நான் இருப்பேன்” என்றார்.
தொடர்ந்து அவர், கீழடியின் தொன்மையையும், அதன் மூலமாகத் தமிழினத்தின் கடந்த காலப் பெருமையையும் மீட்ட அரசுதான் இந்த அரசு. தமிழினத்தின் தொன்மையான பெருமைகளைப் பேசுவோம். அதற்காக அதை மட்டுமே பேசிக் கொண்டு இருந்துவிட மாட்டோம். நிகழ்கால மக்களை அனைத்து வகையிலும் மேன்மை அடைய வைப்போம்” எனவும் கூறினார்.
**-பிரியா**