சரணடைந்த ரவுடி படப்பை குணாவுக்கு 7 நாட்கள் சிறை!

Published On:

| By Balaji

பிரபல ரவுடி படப்பை குணாவை ஜனவரி 31ஆம் தேதிவரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் என்கிற படப்பை குணா. இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவன உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார் உள்ள நிலையில், அவர் மீது எட்டு கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 42 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பல வழக்குகளில் சிறை சென்றுள்ள படப்பை குணா கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர். தமிழ்நாடு மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிலும் தேடி வந்த காவல்துறையினர், அவரது மனைவி எல்லம்மாள் உள்பட ஆறு பேரை காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்துவிட்டு திருப்பி அனுப்பினர்.

மேலும், குணாவின் மனைவி எல்லம்மாள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், தனது கணவர் குணா சரணடைய தயாராக உள்ள நிலையில் காவல்துறை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, என்கவுன்ட்டர் செய்யும் திட்டமில்லை என்றும், படப்பை குணா சரணடையும் பட்சத்தில் காவல்துறை விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவார் என்றும் காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து குணாவின் மனைவி தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும் போலீசாரின் நெருக்கடி மற்றும் என்கவுன்ட்டர் பயம் காரணமாக இத்தனை நாட்களாக தலைமறைவாக இருந்த ரவுடி படப்பை குணா இன்று(ஜனவரி 25) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த 17ஆவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன், ஜனவரி 31ஆம் தேதிவரை படப்பை குணாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, காவல்துறையினர் பாதுகாப்புடன் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இருந்து பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சில தினங்களுக்கு முன்பு, படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறை மீட்டது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share