~7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டு அரசு அதிரடி!

politics

உள் ஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

நீட் தேர்வு வந்த பிறகு கிராமப்புற பகுதிகளிலுள்ள, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி சட்டமன்றத்தில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அது ஆளுநருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி மற்ற மாநிலங்கள் மருத்துவக் கலந்தாய்வுக்கு தயாரான போதிலும், 40 நாட்களுக்கும் மேலாக உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த எதிர்க்கட்சிகள் காலதாமதமின்றி உடனே ஒப்புதல் அளிக்கக் கோரின. ஆனால், இதுபற்றி அனைத்து கோணங்களிலும் பரிசீலித்து முடிவெடுக்க 3-4 வாரங்கள் தேவை என ஆளுநர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதினார். இதனால் ஆளுநருக்கு தமிழகம் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது.

இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காத தமிழக அரசு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு தொடர்பாக இன்று (அக்டோபர் 29) அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், “தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆலோசனையைப் பெற்று, மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பொருட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்போது சேர்க்கைப் பணிகள் தொடங்கியுள்ளன. ஆகவே, இந்த விஷயத்தில் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளதால், அரசுக்கு உள்ள நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் 162ஆவது பிரிவின்படி அரசு கொள்கை முடிவு எடுத்து உள் ஒதுக்கீட்டு உத்தரவை பிறப்பிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாணையை சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

**எழில்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *