மதிமுகவிலிருந்து மூன்று மாவட்டச் செயலாளர்களை வைகோ நீக்கியுள்ளார்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது மகன் துரை வைகோவைக் கட்சிக்குள் கொண்டு வந்ததற்கு சில மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். கடந்த மார்ச் 23ஆம் தேதி மதிமுகவின் 28ஆவது பொதுக்குழு சென்னையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இதில், அவரது மகன் துரை வைகோ தலைமை கழக செயலாளராகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சிவகங்கையைச் சேர்ந்த சிவந்தியப்பன், விருதுநகரைச் சேர்ந்த சண்முகசுந்தரம், திருவள்ளூரைச் சேர்ந்த செங்குட்டுவன் ஆகிய அதிருப்தி மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இதுதொடர்பாக வைகோ கூறுகையில், “நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. தொடர்ந்து ஒரு வருட காலமாகவே எந்த கூட்டத்துக்கும் வராதவர்கள், கழக சட்டதிட்ட விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எப்போதோ நீக்கியிருக்க முடியும். அப்படி இருந்தும் நான் பொறுமை காக்கிறேன். அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்களா என இப்போது சொல்ல முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று இவர்கள் மூவரையும் கட்சியிலிருந்து நீக்கி பொதுச் செயலாளர் வைகோ உத்தரவிட்டுள்ளார்.
மதிமுக கட்சித் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்டுக்கோப்பைச் சீர்குலைக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்ற, புலவர் சே. சிவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம். சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்படக் கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றார்கள்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கின்ற அறிக்கையின்படி, இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**