அகமதாபாத் – ஆக்ரா – டெல்லி: ட்ரம்பின் முழுப் பயணத் திட்டம்!

Published On:

| By Balaji

அமெரிக்க அதிபரின் இரண்டு நாட்கள் பயணத்திட்ட விவரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாள் பயணமாக இன்று (பிப்ரவரி 24) இந்தியா வருகிறார். ட்ரம்ப் மனைவி மெலானியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜெராத் குஷனர் மற்றும் 12 பேர் கொண்ட உயர் மட்டக் குழுவும் இந்தியா வருகிறது. இந்தப் பயணத்துக்காக டொனால்டு ட்ரம்ப்பும், மெலானியா ட்ரம்ப்பும் தற்போது அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டனர்.

முன்னதாக இந்தியப் பயணம் குறித்து பேசிய ட்ரம்ப், “இந்திய மக்களுடன் இருக்கப்போவதை எதிர்நோக்கியுள்ளேன். நாங்கள் லட்சக்கணக்கான மக்களுடன் இருக்கப் போகிறோம். இந்தியப் பிரதமர் என்னுடைய நண்பர். அவருடன் நல்லுறவை வைத்துள்ளேன். அவர்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய நிகழ்ச்சியாக இது இருக்கும் என பிரதமர் என்னிடம் கூறியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்துக்கு வருகை தரும் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

ட்ரம்ப்பின் பயணத் திட்டம் குறித்த அட்டவணையை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ட்ரம்ப் விமான நிலையத்திலிருந்து 12.15 மணிக்கு சபர்மதி ஆசிரமத்துக்குச் செல்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்த பிறகு வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் பங்குபெற சாலை மார்க்கமாக 1.05 மணியளவில் மொரோடோ மைதானத்துக்குச் செல்கிறார். சாலையின் இரு புறங்களிலும் ட்ரம்புக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க இருக்கிறார்கள்.

வணக்கம் ட்ரம்ப் நிகழ்ச்சியில் இருநாட்டுத் தலைவர்களும் உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து 3.30 மணிக்கு விமானம் மூலம் ஆக்ரா புறப்படும் ட்ரம்ப், 5.15 மணிக்கு தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். சூரியன் மறைவதற்கு முன்பாக குடும்பத்தினருடன் சுமார் ஒரு மணி மணி நேரம் வரை அங்கு செலவழித்துவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அத்தோடு முதல் நாள் நிகழ்ச்சிகள் முடிகின்றன.

இரண்டாவது நாளான நாளை காலை 10 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ட்ரம்புக்கு முப்படைகளின் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பை ஏற்றுக்கொண்டு நேராக ராஜ்காட்டிலுள்ள காந்தி நினைவிடத்துக்குச் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

12.40 மணியளவில் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் மோடி – ட்ரம்ப் இருவரும் சந்தித்து அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். 1.40 மணி நேர சந்திப்புக்குப் பிறகு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுதல் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ட்ரம்புக்கு மோடி மதிய விருந்து அளிக்கிறார். அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் சில தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

மாலை 7.30 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்துப் பேசுகிறார் ட்ரம்ப். அங்கு அவருக்கு பிரத்யேகமாக இரவு விருந்து அளிக்கப்படுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக்கொண்டு இரவு 10 மணிக்கு அமெரிக்கா புறப்படுகிறார்.

**உணவு**

அகமதாபாத்தில் ட்ரம்புக்கு ஃபார்ச்சூன் லேண்ட்மார்க் நட்சத்திர விடுதியில் இருந்து உணவு வரவழைக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஊடகத்துக்குப் பேட்டியளித்த விடுதியின் தலைமை சமையல் நிபுணர் சுரேஷ் கண்ணா, “ட்ரம்புக்கு உள்ளூர் உணவு வகைகள் பரிமாறப்படவுள்ளன. குஜராத்தின் ஸ்பெஷலான கமன், குஜராத்தி இஞ்சி மற்றும் லெமன் டீ, புரொக்கோலி மற்றும் சோள சமோசா, ஆப்பிள் பை, காஜு கத்லி ஆகியவை வழங்கப்படும். சபர்மதி ஆசிரமத்தில் அவர்கள் மதிய உணவை முடித்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்தார்.

**-த.எழிலரசன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share