அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையக் கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை நேற்று (ஜனவரி 8) அறிவித்திருக்கிறார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா.
2022ஆம் ஆண்டில் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்ட மன்றங்களின் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து இந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரம் ஏற்கனவே சூடு பிடித்திருக்கிறது.
இதேநேரம் ஓமிக்ரான் பரவல் அதிகரித்திருப்பதால் தேர்தலைத் தள்ளி வைக்க வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது. ஆனால் தேர்தல் ஆணையர்கள் ஆய்வு நடத்தி, உரிய நேரத்தில் தேர்தல் நடக்கும் என்று கடந்த வாரம் அறிவித்தனர். இதற்கிடையே மத்திய சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் தேர்தல் ஆணையர்களைச் சந்தித்தனர்.
இந்தப் பின்னணியில் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் ஐந்து மாநிலத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா.
“உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 690 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பாதிப்பு தேர்தலை நடத்துவதற்கு சவாலாக உள்ளது. ஆனபோதும் கடந்த ஆறு மாதங்களாக நாங்கள் தேர்தல் பணியாற்றி வருகிறோம். தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் மட்டும் ஏழு கட்டங்களாக நடத்தப்படும். மணிப்பூர் மாநிலத்தில் இரு கட்டங்களாகவும், ஏனைய பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும்.
முதல் கட்டமாக பிப்ரவரி 10ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறும். இரண்டாவது கட்டம் பிப்ரவரி 14ஆம் தேதி தேதி உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நடக்கும். இவற்றில் பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 14ஆம் தேதி மட்டுமே தேர்தல்.
மூன்றாவது, நான்காவது கட்ட தேர்தல்கள் உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 20, பிப்ரவரி 23 தேதிகளில் நடைபெறும்.
ஐந்தாவது கட்டத் தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் (முதல் கட்டம்) நடைபெறும். ஆறாவது கட்டமாக மார்ச் 3ஆம் தேதி உத்தரப்பிரதேசம், மணிப்பூர் (இரண்டாம் கட்டம்) ஆகிய மாநிலங்களில் நடைபெறும். ஏழாவது கட்ட இறுதிக்கட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் நடக்கும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து தேர்தல்களுக்கும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார் தலைமை தேர்தல் ஆணையர்.
**-வேந்தன்**
�,