கடந்த 2 மாதங்களில் நாடாளுமன்றத்தில் இரு முறை தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை திரும்பப் பெறவேண்டும் என்று தமிழக ஆளும் கட்சியான திமுக வலியுறுத்திய நிலையில்… இன்று ஏப்ரல் 7ஆம் தேதி தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றுள்ளார்.
தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப தாமதப்படுத்துவதாகவும், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் திமுக மக்களவையில் புகார் தெரிவித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி மக்களவையில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழக ஆளுநர் பற்றி விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்தார்.
அது நிராகரிக்கப்பட்டதையடுத்து திமுக இருமுறை மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.
இந்த பின்னணியில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி சென்றிருக்கிறார். இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவிக்கிறது.
“பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து தமிழ்நாடு முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆளுநர் எடுத்துரைத்தார்” என்று ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
ராஜ்நாத்சிங் உடனான சந்திப்பை அடுத்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் ஆளுநர் சந்திக்கக்கூடும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்புகளின் போது தமிழக அரசுடனான மோதல் போக்கு குறித்து ஆளுநர் ஒன்றிய அரசுக்கு விளக்கம் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
**வேந்தன்**