தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை என கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (டிசம்பர் 27) நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய அனைவரையும் விட துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியின் பேச்சு காட்டமாக இருந்தது. 1967ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததன் பிறகு இங்கு தேசிய கட்சிகளை நுழைய விடாமல் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியில் இருந்து வருகின்றன என்று குறிப்பிட்ட முனுசாமி,
“சில கருங்காலிகள் திராவிட இயக்க ஆட்சியில் தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சொல்கிறார்கள். சில தேசிய கட்சிகள், சில சந்தர்ப்பவாதிகள், பெரியார் காலத்தில் இருந்து திராவிட இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று அலையும் கூட்டம் அவ்வாறு சொல்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத காலத்தில் சிலர் உள்ளே நுழைந்துவிடலாம் என நினைக்கிறார்கள்” என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார்.
அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்து தன்னுடைய உரையை நிறைவு செய்தார் கே.பி.முனுசாமி.
2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமையும் எனவும், ஹெச்.ராஜா அமைச்சராவார் என்றெல்லாம் பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசி வரும் நிலையிலும் அவர்களை கடுமையாக சாடி இவ்வாறு பேசியுள்ளார்.
**எழில்**�,