மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது,
“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார் என்பதைக் காட்டும் சில சமிக்ஞைகள் கோட்டை வட்டாரத்தில் இருந்தும், கட்சி வட்டாரத்தில் இருந்தும் கிடைக்கின்றன. அதிமுகவின் அமைப்பில் ஊராட்சி செயலாளர்கள் என்ற பதவியையே ரத்து செய்திருக்கிறார்கள். ஐடி விங்கை முழுமையாக மாற்றி மண்டல அளவிலான நிர்வாகிகளை நியமித்திருக்கிறார்கள்.
ஊராட்சி செயலாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டது பற்றி மின்னம்பலத்தில் நேற்று [செய்தி](https://minnambalam.com/politics/2020/05/19/63/edapadi-rice-distribution-admk-important-decesion-panchayat-seceratary)வெளியிடப்பட்டிருந்தது. எடப்பாடி தொகுதியில் அரிசி விநியோகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளும் அதற்கு ஒரு காரணம் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னுமொரு முக்கியக் காரணமும் இருக்கிறது என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.
‘அதிமுகவில் ஊராட்சி செயலாளர் என்ற பதவியை திணித்ததே சசிகலாதான். தமிழகத்தில் முக்குலத்தோர் செல்வாக்கு இல்லாத இடங்களில் கூட ஊராட்சி கிளைச் செயலாளர்கள் என்ற பதவிக்கு அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை நியமித்திருந்தார் சசிகலா. அந்தப் பதவிதான் இன்னும் அதிமுகவில் தொடர்கிறது. இந்தப் பதவியால் கட்சிக்குள் சாதிப் பிரச்சினை தலை தூக்குவதாக அப்போதே ரிப்போர்ட் போனது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஊராட்சி செயலாளர்களில் கணிசமானோர் அமமுகவுக்கு போய்விட்ட நிலையில்தான் அந்தப் பதவியே தேவையில்லை என்று ரத்து செய்திருக்கிறார்கள் ஓபிஎஸும், எடப்பாடியும்.
இது ஒரு மூவ் என்றால் அடுத்து ஒரு முக்கியமான மூவ் ஆக, தமிழகத்தில் விரைவில் வாரியத் தலைவர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். இப்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அமைச்சர்தான் ராஜாவாக இருக்கிறார். பல மாவட்டங்களில் செல்வாக்கு படைத்த அதிமுக பிரமுகர்கள் பலர் பதவி ஏதும் இல்லாமல் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில் கிராம அளவில் அதிமுகவில் பலர் பதவி பெற்றாலும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இனியும் நடக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் செல்வாக்கு பெற்ற அதிமுக புள்ளிகள் யார் யார் என்பதை கணக்கெடுத்து வைத்திருக்கிறார் முதல்வர். இவர்களில் பலரை வாரியத் தலைவர்களாக நியமிப்பதன் மூலம் அவர்களை திருப்தியாக வைத்திருப்பதன் வாயிலாக தேர்தலை எதிர்கொள்வது எளிதாக இருக்கும் என்று கருதுகிறார்கள் எடப்பாடியும், பன்னீரும்.
தமிழகத்தில் பல்வேறு வாரியத் தலைவர் பதவிகள் காலியாகவே இருக்கின்றன. இப்போது வாரியங்கள் அமைச்சர்களாலும், அதிகாரிகளாலும்தான் கையாளப்படுகின்றன. மத்திய அரசு தனது பல்வேறு வாரியப் பதவிகளை பாஜகவினருக்கும், தனது ஆதரவாளர்களுக்கும் வழங்கி வருகிறது. அதுபோல தேர்தல் நேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த அதிகமானோர் அரசுப் பதவிகளில் இருந்தால் நல்லது என்று கருதுகிறார் எடப்பாடி. எனவே விரைவில் வாரியத் தலைவர்கள் நியமன அறிவிப்புகள் வரக் கூடும்’ என்கிறார்கள் அதிமுகவின் டாப் லெவல் சீனியர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
�,