வெற்றிவேல் யாத்திரை- மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்திய முருகன்

Published On:

| By Balaji

தமிழக பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை நடத்தப்பட இருப்பதை இன்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் தமிழக தலைவர் எல். முருகன்.

கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி விவகாரத்தை அடிப்படையாக வைத்து தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தமிழகம் முழுக்க யாத்திரை தொடங்கப் போகிறார் என்றும் முருகனின் அறுபடை வீடுகளை மையமாகக் கொண்டு அந்த யாத்திரை நடத்தப்படுமென்றும் மின்னம்பலத்தில் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதியே [யாத்திரை தொடங்கும் பாஜக தலைவர்](https://minnambalam.com/politics/2020/09/08/11/modi-birthday-bjp-leader-murugan-yathra-tamilnadu) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை இன்று (அக்டோபர் 9) உறுதிப்படுத்தியிருக்கிறார் பாஜக தலைவர் முருகன்.

“பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை கொண்டாடும் விதமாகவும் தமிழகம் முழுவதும் பட்டித் தொட்டியெல்லாம் தாமரையை மலரவைக்கவும், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘வெற்றிவேல் யாத்திரை’யை, திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நிறைவுசெய்யத் திட்டமிட்டுள்ளார்”என்றும் அந்த செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

ஊரடங்கு தளர்வுகள் காரணமாக யாத்திரை தாமதமான நிலையில், இன்று வெற்றிவேல் யாத்திரை மேற்கொள்ள இருப்பது பற்றியும் அதற்கான இலச்சினையையும் கமலாலயத்தில் வெளியிட்டார் பாஜக தலைவர் முருகன். முன்னதாக பேசிய பாஜக துணைத் தலைவர் நரேந்திரன்,

“ நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கும் இந்த யாத்திரை டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களைச் சந்தித்து பிரச்சினைகளை கேட்டறிவது. மாவட்ட பாஜக நிர்வாகிகளை சந்திப்பது என்று இந்த யாத்திரை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் வழியாகவும் செல்லும். அறுபடை வீடுகளுக்கும் சென்று டிசம்பர் 6 ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்.

திருச்செந்தூரில் முருகன் சூர சம்ஹாரம் செய்வது போல தமிழகத்தில் இந்து விரோத சக்திகளை அகற்றுவோம். யாத்திரையின் முழு விவரங்களும் அதாவது எந்த தேதியில் எந்த மாவட்டம் வழியாக யாத்திரை செல்லும் என்பது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும்” என்று விவரங்களை அறிவித்தார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், ”வெற்றிவேல் யாத்திரை தமிழகத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் யாத்திரையாக இருக்கும். மூன்று மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தியிருந்தார்கள். அதில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அது போதாது. இந்த கருப்பர் கூட்டத்திற்கு பின்னால் திமுக தான் இருக்கிறதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. இந்துக்களின் மனதைப் புண்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக இருக்கிறது.

அவர்களைப் போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்கிச் சொல்லவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் வகையில் வெற்றிவேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தின் சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை அலங்கரிக்க செய்யும்வரை ஓய மாட்டேன் ” என்று தெரிவித்தார் எல். முருகன்.

மேலும் வாராரு வாராரு முருகன் வேல் கொண்டு வாராரு என்ற பாடலும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

**-ஆரா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share