uதேர்தலில் ஃபேஸ்புக் தலையீடு: சோனியா புகார்
உலகளாவிய சமூக தள நிறுவனங்களான பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை இந்திய ஜனநாயகத்தை ஆபத்துக்கு உள்ளாக்கும் வகையில் பாரபட்சத்தோடு செயல்படுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று மார்ச் 16ஆம் தேதி மக்களவையில் பேசிய சோனியா காந்தி, “சர்வதேச சமூக தள நிறுவனங்கள் அரசியல் கட்சிகளை சமமான அளவில் பங்கெடுக்க விடுவதில்லை. உதாரணத்துக்கு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை செய்தியில்… ஃபேஸ்புக் நிறுவனம் தான் வகுத்துள்ள வெறுப்புப் பிரச்சார தடுப்பு விதிகளை ஆளுங்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு முறையாக பின்பற்றாமல் வளைந்து கொடுப்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
அல்ஜசீரா ஊடகம் நம் நாட்டின் தேர்தல் சட்டங்களையும் தனது வரம்புகளையும் மீறி ஃபேஸ்புக் ஆட்சிக்கு எதிரான குரல்களை முழுமையாக ஒடுக்கி இருப்பதை வெளியிட்டுள்ளது.
இந்த வகையில் நம் நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு பேஸ்புக்கால் இடையூறு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் கூட தவறான தகவல்களால் வெறுப்புப் பிரச்சாரங்களால் உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் இதனால் லாபம் ஈட்டுகின்றன. ஆளும் கட்சிக்கும் ஃபேஸ்புக் போன்ற சர்வதேச கார்ப்பரேட் சமூக தள நிறுவனங்களுக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை மேற்குறிப்பிட்ட செய்தி வெளியீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தள நிறுவனங்களின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு நமது ஜனநாயகத்தை காப்பாற்றவும் சமூக நல்லிணக்கத்தை தக்க வைக்கவும் இந்த நடவடிக்கை அவசியமானது” என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் பேசியுள்ளார்.
நடந்து முடிந்த உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜகவுக்கு ஆதரவான பல்வேறு விஷயங்கள் சமூகத் தளங்கள் மூலம் வெகு வேகமாக பரப்பப்பட்டன என்றும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என்றும் தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பியுள்ளார் சோனியா காந்தி.
**வேந்தன்**