�சித்தர் வாக்கும் ஸ்டாலின் வாக்கும்! துரைமுருகனின் திடீர் அறிக்கை பின்னணி!

politics

செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற திமுகவின் காணொலி பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த விழா மேடையிலேயே மிகவும் உருக்கமாகவும் ஆழமாகவும் பேசிய துரைமுருகன், **நானும் என் குடும்பமும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தாசானு தாசர்களாக இருப்போம். விசுவாசமாக இருப்போம்”**என்றெல்லாம் நெகிழ்ந்து போய் பேசினார்.

இந்த நிலையில் திடீரென செப்டம்பர் 20ஆம் தேதி அதாவது பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக்கொண்டு பத்து நாட்கள் கழித்து துரைமுருகனிடம் இருந்து ஓர் அறிக்கை வெளிவந்தது ‌

“நம் தலைவர் தளபதி அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற வண்ணம் நடந்து கழகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபடுவேன்”என கொட்டை எழுத்துக்களில் தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கை வெளிவந்தது.

அதில் “திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெருமைமிக்க பொதுச்செயலாளர் தகுதிக்கு நான் போட்டியிட அனுமதித்த கழகத்தின் போற்றுதலுக்குரிய கழகத் தலைவர் தளபதி அவர்களுக்கும்,..என்னை போட்டியின்றி அத்தகுதிக்கு தேர்ந்தெடுத்த மதிப்புக்குரிய தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் மாவட்ட கழக நிர்வாகிகளுக்கும் எனது மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

**வரலாற்றுச் சிறப்புமிக்க வணக்கத்துக்குரிய தலைவர்கள் அமர்ந்து நிர்வாகம் செய்த அந்த இடத்தில் அமரப்போகும் நான் அந்த தலைவர்களின் புகழுக்கும் கீர்த்திக்கும் பங்கம் ஏற்படா வண்ணம் நடந்து கொள்வேன் என்று உறுதி கூறுவதோடு

நம் தலைவர் தளபதி அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற வண்ணம் நடந்து கழகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பாடுபடுவேன் என்பதையும் உறுதி செய்கிறேன்”**என குறிப்பிட்டுள்ளார் துரைமுருகன்.

மேலும் தன்னை நேரில் வந்து பாராட்டிய கழகத்தின் எல்லா நிலையில் இருக்கும் தோழர்களுக்கும் தொலைபேசி மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் நேரில் வந்து வாழ்த்து சொன்ன பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய கட்சித் தலைவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் துரைமுருகன்.

பொதுச்செயலாளர் பதவி ஏற்று பத்து நாட்கள் கழித்து இப்படி ஒரு அறிக்கையை எதற்காக வெளியிட வேண்டும் என்று திமுகவில் ஒரு விவாதமே நடந்து வருகிறது.

**“பொதுச்செயலாளர் பதவியேற்ற அன்றே பொதுக்குழுவிலேயே மிகவும் ஹம்பிள் ஆக பேசினார் துரைமுருகன். இந்த நிலையில் மீண்டும் இந்த அறிக்கையின் மூலம் ஏற்கனவே பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்த அவர்களின் புகழுக்கு பங்கம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வேன் என்றும் ஸ்டாலின் எண்ணத்துக்கு ஏற்ப நடந்து கொள்வேன் என்றும் கூறி இருப்பது ஏதோ குழந்தை இம்போசிஷன் எழுதுவது போல இருக்கிறது** கட்சியின் மிக மிக சீனியரான துரைமுருகன் பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்து விட்ட பிறகும் இப்படிப்பட்ட மிகப்பெரிய வார்த்தைகளுடன் அறிக்கை வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது” என்கிறார்கள் தலைமை கழக நிர்வாகிகள் சிலர்.

இந்த சந்தேகத்திற்கு வேலூர் மாவட்ட திமுகவினர் பதில் தருகிறார்கள்..

“செப்டம்பர் 17 ஆம் தேதியன்று இரவு துரைமுருகன் தன் மகன் கதிர் ஆனந்தோடு ஸ்ரீலஸ்ரீ ஆனந்த சித்தரை பார்க்க சென்றிருந்தார். சித்தரிடம் ஆசி வாங்கும் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். துரைமுருகனை அந்த சித்தர் ஆசீர்வதிக்கும் போது முதல்வர் பதவியை வகிக்கும் யோகம் உனக்கு இருக்கு என்று சொன்னதாக கதிர் ஆனந்த் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார். இது மின்னம்பலத்தில் செய்தியாக வந்தது. அதன் பிறகு சமூக தளங்களிலும் இந்தச் செய்தி அதிகமாக பகிரப்பட்டது.

இந்த தகவல் திமுக தலைவர் ஸ்டாலின் வரை கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து சற்றே மனம் கசந்த ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவரான திருவள்ளூர் பிஜி இராஜேந்திரனை அழைத்து, ’துரைமுருகன் கிட்ட பேசுங்க. சித்தர்கிட்ட போனது பத்தி என்னன்னு கேளுங்க’ என்று கூறியிருக்கிறார். அவர் சில நேரம் கழித்து ஸ்டாலினிடம், ‘தலைவரே துரைமுருகன் என்கிட்ட சரியா பேசுறதில்லை அவர் பையனும் சரியா பேசுறதில்லை ’என்று கூறியுள்ளார்.

இதையடுத்து **ஸ்டாலினே துரைமுருகனுக்கு போன் போட்டு, ” அண்ணே… என்ன அண்ணே இதெல்லாம் நல்லாவா இருக்கு?** நீங்க சித்தரை பாத்துட்டு வந்து போட்டோவும் செய்தியும் பரவி இருக்கு பாத்தீங்களா”என்று கேட்டிருக்கிறார். அதற்கு துரைமுருகன் ஏதோ சமாளிப்புகளை பதிலாக சொல்லி, ‘அவரை சாதாரணமாதான் பாத்தேன் தம்பி’ என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ஸ்டாலின் சற்றே கோபித்துக் கொண்டிருக்கிறார்.

உடனே துரைமுருகன், ‘யார்டா அந்த படத்தை வெளியிட்டது?” என்று கதிர் ஆனந்தை கண்டித்திருக்கிறார். அதன் பிறகுதான் பணிவு வார்த்தைகள் நிறைந்த அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் வேலூர் திமுகவினர்.

**-வேந்தன்**

[முதல்வர் யோகம்? துரைமுருகனை ஆசீர்வதித்த சித்தர்!]( https://minnambalam.com/politics/2020/09/18/52/duraimurugan-seek-blessings-from-siddhar)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.