`சமத்துவ ஜகத்குரு ஸ்ரீமத் ராமானுஜர்

politics

-நிலவளம் கு.கதிரவன்

“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக/இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி/ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு” என்ற பூதத்தாழ்வாரின் பாசுரப்படி, இவ்வுலகை உய்விக்க, இப் பூமண்ணில் 1000 வருடங்களுக்கு முன்னர் அவதரித்தவர் ஸ்ரீமத் ராமானுஜர். “பொலிக! பொலிக! பொலிக!, கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்ற நம்மாழ்வாரின் ஞான நோக்கப்படி, இக் கலியின் காரிருளை போக்க வந்தவர் காரேய் கருணை ராமானுஜர். பல புற சமயங்கள் ஆளுமை செலுத்தி வந்த காலகட்டத்தில், ஸ்ரீ வைஷ்ணவத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர். அன்பையே அகலாக ஏந்தி மக்களிடம் சென்றார். மக்களுக்காக தொண்டாற்றினார். ஸ்ரீ வைஷ்ணவம் மீது மக்களுக்கு பற்றுதலை ஏற்படச் செய்தார். பக்தி என்ற நெய் சேர்த்து ஞான விளக்கேற்றினார்.
மகான்களின் அவதாரம் பெரும்பான்மையான மக்களின் நன்மைக்காகவே ஏற்படுகிறது. அவர்கள் பூவுலகில் இறங்கி வருவதற்கு சுயநலமான காரணங்கள் ஏதுமில்லை. தாழ்த்தப்பெற்ற, உதவியற்ற, ஏழையான பொதுமக்களின் துயரங்களை எவ்வாறு நீக்குவது என்பதிலேயே அவர்களின் கருத்துக்கள் எப்போதும் ஆழ்ந்திருக்கும். கோயில் என்பதும், வழிபாடு என்பதும் ஒரு சாராரின் சொத்தாகவே இருந்த காலத்தில், அத் திருக்கோயில்களின் நிர்வாகத்தை முறைப்படுத்தி, அனைத்து சமுதாயத்தினரையும் பங்குபெறச் செய்து, எளிய மக்களும் பின்பற்றத் தக்க பக்தி மார்க்கத்தை போதித்தவர் ராமானுஜர்.
தமது விசிஷ்டாத்வைத கோட்பாடுகளை எளிய மக்களும் புரிந்து கொண்டு, அதை முறையாகப் பின்பற்றி மோட்ச நிலை எய்துவதற்கு உந்து சக்தியாக விளங்கினார் ராமானுஜர். தமது எண்ணம், சொல், செயல் யாவும் அடித்தட்டு மக்களுக்காகவும், உயர்ந்தவன், தாழ்ந்தவன், என்ற பேதமின்றி அனைவரையும் சரிநிகர் சமானமாக வைத்து தொண்டாற்றியவர். தமது ஸ்ரீ வைஷ்ணவ கொள்கைகளுக்கும், வர்ண, ஜாதி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கும் தடையாக இருந்த தமது சம்சார பந்த வாழ்க்கையை, “சற்றே ஏறுமாறாக நடப்பாளாகில் கூறாமல் துறவறம் கொள்” என்றபடி துறவறத்தை ஏற்றவர்.
காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யமும், நித்ய கைங்கர்யமும் செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் தம்மை சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டபோது, திருக்கச்சி நம்பிகள் ராமானுஜரின் வேண்டுகோளை நிராகரித்தார். அதோடு, “நானோ வைஸ்யன், நீரோ உத்தம பிராமணர். பரம வைஷ்ணவர்”. நான் உங்களுக்கு சேவை செய்ய வேண்டி இருக்க, நீரோ எனக்கு சேவை செய்வதும், உபதேசம் பெற முற்படுவதும் அழகல்ல என்றார். அதற்கு ராமானுஜர், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரை குரு தெய்வமாக கொண்டாடினார் அல்லவா? ஏன் திருப்பாணாழ்வார் உட்பட இவர்கள் மூவரையும் ஆழ்வார்கள் வரிசையில் வைத்து கொண்டாடுகிறோம்? என்று கேட்க, ராமானுஜரின் சாதுர்ய பேச்சைக் கேட்டு, மகிழ்ச்சி அடைந்து அவரின் ஆசையை நிறைவேற்றினார்.
அப்பொழுது தொடங்கியது குடும்பப் பிணக்கு. மிகவும் ஆசாராமான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் ராமானுஜரின் மனைவி தஞ்சமாம்பாள். தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பிகளை குருவாக ஏற்றது இவருக்கு அறவே பிடிக்கவில்லை. இவ்வெறுப்பு, திருக்கச்சி நம்பிகள் ராமானுஜர் இல்லத்திற்கு எழுந்தருளி, அமுதுண்ணும் போது, தஞ்சமாம்பாளால் ஏற்பட்ட அவமானம், மற்றொரு ஆசாரியர் பெரியநம்பியின் மனைவியோடு ஏற்பட்ட மோதல் போன்ற நிகழ்ச்சிகளால், குலத் தாழ்ச்சியை விரும்பாத ராமானுஜர் துறவறம் பூண்டார்.
அதேபோல் “த்வயம்” மந்திரத்தின் பொருளை அறிந்து கொள்வதற்காக, திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் 18 முறை நடந்து, தொடர் முயற்சியின் விளைவாக, ஓராண் வழி உபதேசம் தவிர, வேறு யாருக்கும் இம் மந்திரத்தின் உட்பொருளை சொல்லக் கூடாது. அப்படி கூறினால் நரகம்தான் சித்திக்கும் என்ற திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம், த்வய மந்திரத்தின் உட்பொருளை கற்றறிந்து, அதை உடனே திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மேலேறி, ஆசையுடையோர் அனைவரும் வாருங்கள் எனக் கூவி, த்வய மந்திரத்தின் உட்பொருளை ஜாதி, மத பேதமின்றி அனைவருக்கும் உபதேசித்தார். இதைக் கண்ட திருக்கோஷ்டியூர் நம்பி, “உமக்கு நரகம் நிச்சயம்” என்று கூற, அதற்கு ராமானுஜர், “இம் மந்திரத்தின் உட்பொருளை நான் கூறியதால் நான் ஒருவன்தான் நரகம் செல்வேன். ஆனால் இம் மண்ணில் உள்ள மக்கள் எல்லோரும் மோட்சத்திற்கு செல்வார்கள் அல்லவா?” என்று கூறிய ராமானுஜரை ஆரத் தழுவி, இந்த உள்ளம் எனக்கு இல்லாமல் போயிற்றே. இனிமேல் இச்சிந்தாந்தம் ராமானுஜர் சித்தாந்தம் என்று அழைக்கப்படட்டும். உம்மை “எம்பெருமானார்” என்று இனி உலகம் அழைக்கட்டும் என்று ஆரத் தழுவி வாழ்த்தினார் திருக்கோஷ்டியூர் நம்பி.
ராமானுஜருக்கு ஜாதி வேறுபாட்டில் நம்பிக்கை கிடையாது. அதுவும் பக்தியில் ஒன்றியவர்களை இவ்வேறுபாட்டின் அடிப்படையில் பார்க்கக் கூடாது என்பது அவரின் எண்ணம். ராமானுஜர் தமது சீடர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டான் தோள்களின் மீது கையைப் போட்டுக் கொண்டு, காவிரிக் கரை சென்று தீர்த்தமாடிவிட்டு, திரும்பி வரும்போது தாழ்ந்த குலத்தவரான உறங்காவில்லி தாசரின் தோள்மீது கைபோட்டு திருமடம் திரும்புவார். அப்படிப்பட்ட உத்தம சீலர்.
ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த மாறனேர் நம்பிக்கு, பெரிய நம்பிகள் ஈமக் கிரியை செய்ததை ஆதரித்ததும், நீலகிரி காட்டில் நல்லான் சக்கரவர்த்தி, ஹரிஜன வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு ஈமக்கிரியை செய்ததால், தமது குலத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதை அறிந்த ராமானுஜர், அங்கு சென்று அனைத்து வேடுவர்களுக்கும் ஸ்ரீ வைஷ்ணவ மார்க்கத்தை போதித்ததும், கர்நாடகா மேல்கோட்டையில் ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்வித்து, அவர்களை ஆதரித்த நிகழ்வுகள் எல்லாம் அவரின் சமத்துவ நோக்கினை பறைசாற்றும் நிகழ்வுகளாகும்.
குலத் தாழ்ச்சி, உயர்ச்சியில் ஆர்வமில்லாத ராமானுஜருக்கு பாலின வேற்றுமையிலும் எப்போதும் நாட்டமிருந்ததில்லை. ஆண், பெண் என அனைவரையும் சமமாகவே பாவித்தவர். ஒரு சமயம் மோர் விற்கும் பெண்மணி ராமானுஜரை நமஸ்கரித்து, எனக்கு காசும் வேணாம், பொருளும் வேணாம்… பெருமாளை அடையணும், மோட்சம் கிடைக்கணும். அதுக்கு வழியைக் காட்டுங்க, சந்தோஷமா போயிடுவேன் என்றாள்.
ராமானுஜர் வியப்புடன் பார்த்தார். ஆசார நியமங்களோ சாஸ்திர ஞானமோ அறியாத அவளுக்குள் மோட்சம் வேண்டும் என்ற ஆசை எப்படித் தோன்றியது? இந்தக் கோரிக்கையை ராமானுஜரே எதிர்பார்க்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு கவலைப்படாதேம்மா…. உன் நல்ல குணத்திற்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும், போய் வா என்றார். ஆனால் அந்தப் பெண்மணி விடவில்லை. உங்க வாக்கு பலிக்கட்டும் சாமி. அந்த மோட்சம் கிடைக்கிறதுக்கு வழியைக் காட்டுங்க. போய்ச் சேர்றேன் என்றாள். ராமானுஜர் சிரித்தார். பிறகு அவளிடம் நீ நினைப்பது போல் மோட்சத்திற்கு வழிகாட்டுவதற்கோ, மோட்சம் வழங்குவதற்கு உண்டான தகுதியோ, எனக்கோ, இங்கு கூடியிருக்கும் சிஷ்யர்களுக்கோ இல்லை. மேலே திருமலையில் இருக்கிறானே ஒருவன்….. ஏழுமலைக்குச் சொந்தக்காரன்…. அவன் கிட்ட போய்க் கேள். உனக்கு வேண்டியதை எல்லாம் அருளுகின்ற தகுதி அவனுக்குத்தான் உண்டு என்றார். இதற்குப் பிறகும் மோர்க்காரப் பெண்மணி நகருவதாக இல்லை. அவள், சாமி மேலே இருக்கிற பெருமாள்கிட்ட போய் எத்தனையோ தடவை மோட்சம் வேணும். மோட்சம் வேணும்னு கேட்டேன். ஆனா அவர் வாயைத் தொறந்து பேசமாட்டேங்கிறாரே என்றாள் கவலையுடன்.
அப்படி இல்லம்மா, அவருக்கு என்ன வேலை இருக்கோ… அதை குறையா வெச்சுக்காதே… நீ விடாமல் கேட்டுக் கொண்டே இரு…. நிச்சயம் ஒரு நாள் மோட்சம் கொடுப்பார் என்றார் ராமானுஜர். இல்லீங்க சாமி, ஒங்களைத்தான் நம்பறேன் என்றாள். இவள் ஏதோ தீர்மானத்துடன் இருக்கிறாள் போலிருக்கிறதே என்று யோசித்தார் ராமானுஜர், பிறகு அந்தப் பெண்மணி சாமி எனக்கு மோட்சம் தரச் சொல்லி பெருமாள் கிட்ட சிபாரிசு செஞ்சு ஓலை எழுதித் தரணும். உங்களை மாதிரி பெரியவங்க கொடுத்தாதான் பெருமாள் சாமி கேட்பாரு என்றாள் தெளிவாக. இதற்கு மேலும் மறுக்க முடியாது என்று உணர்ந்த ராமானுஜர், சிஷ்யனிடம் ஓர் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொன்னார். சீடர்களுக்கு வியப்பு தாங்கவில்லை. குருநாதர் கேட்டபடி கொண்டு வந்து கொடுத்தனர். ராமானுஜர் மேலே அண்ணாந்து பார்த்து ஏழுமலையானை மனதால் இருகரம் கூப்பி வணங்கி முகவரி எழுதும் இடத்தில் வெங்கடேசப் பெருமாள், திருமலை என்று குறிப்பிட்டு பெண்மணியின் கோரிக்கையை எழுதி, தன் கையெழுத்தையும் போட்டுக் கொடுத்தார். ஓலையை வாங்கிய அடுத்த விநாடியே, அந்தப் பெண்மணி ஆனந்தமாக திருமலை நோக்கிப் புறப்பட்டாள்.
தவிரவும், ராமானுஜர் திருக்கோளுருக்கு எழுந்தருளியபோது, எதிர்ப்பட்ட பெண்மணியை கண்டு அவரின் வீட்டில் அமுதுண்ட நிகழ்வும், அதன் பின் அப் பெண்மணி திருக்கோளுர் பெண்பிள்ளை ரகசியம் இயற்றியதும், கொங்குப் பிராட்டிக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்வித்து, தமது அடியாராக ஏற்றுக் கொண்டதும் ராமானுஜரின் பாலின சமத்துவத்துக்கு சான்றாகும்.
இப்படி ராமானுஜர் இப்பூவுலகில் 120 ஆண்டுகள் பெரு வாழ்வு வாழ்ந்து, இறுதி வரை எளிய மக்களுக்காக தொண்டாற்றியதும், திருக் கோயில் நிர்வாகத்தை முறைப்படுத்தி, அது இன்றளவும் தொடர்வதும், திருக் கோயில்கள் கல்விச் சாலைகளாகவும், மக்களுக்கு அன்னம் வழங்கும் ததியாராதனைக் கூடங்களாகவும் விளங்குவதற்கு முழு முதற் காரணம் ஸ்ரீமத் ராமானுஜர் அவர்களே காரணம்.
ஸ்ரீமத் ராமானுஜர் மறைந்து 1000 ஆண்டுகளைக் கடந்தும், இன்றும் அவர் நமக்கு தேவைப்படுகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சாதி மறுப்பு, பாலின சமத்துவம் பேசிய புரட்சித் துறவி அவர். அவருக்கு இந்நாளில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சமத்துவத்திற்கான சிலை நிறுவி, பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைத்திருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு ராமானுஜரின் போதனைகளை நினைவு கூருவது மிகப் பெரிய கைங்கர்யமாகும்.

**கட்டுரையாளர் குறிப்பு:** நிலவளம்.கு.கதிரவன்., திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நடைபெறும் திருப்பாவை உபன்யாசகர், செஞ்சி திருக் குறள் பேரவை செயற்குழு உறுப்பினர், தமிழியக்கத்தின் செஞ்சி ஒன்றிய செயலாளர்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *