நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஒருமணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாவின் இசைக்குயில் என புகழப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று காலை காலமானார். இதையடுத்து அவரது உடல் மும்பையிலுள்ள சிவாஜி பூங்காவில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் லதா மங்கேஷ்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில் மீண்டும் நாடாளுமன்ற இரு அவைகளும் இன்று(பிப்ரவரி 7) காலை கூடியது. மாநிலங்களவை கூடியதும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு மறைந்த லதா மங்கேஷ்கருக்கு இரங்கல் குறிப்பை வாசித்தார்.
அதில், “லதா மங்கேஷ்கரின் மறைவால், இந்திய இசை மற்றும் திரைப்பட உலகில் ஒரு பழம்பெரும் பின்னணிப் பாடகியையும், மனிதநேயமிக்க மனிதரையும், உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவை குறிக்கிறது. இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று லதா மங்கேஷ்கருக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகள் ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. அதுபோன்று மக்களவையிலும் அவருக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஒருமணி நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.
**-வினிதா**