நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அப்படியும் அடங்காத ரசிகர்கள் கடந்த ஜனவரி 10ஆம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் என்ற பெயரில் ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதையடுத்து மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்ட ரஜினி, “ எனது உடல் நிலையை காரணம் காட்டி தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முடிவை தவிர்த்தேன். இதுபோன்ற போராட்டங்களை நடத்தி என்னை வேதனைப் படுத்தாதீர்கள்” என்று மீண்டும் வேண்டுகோள் வைத்தார்.
இதற்கிடையில் ரஜினி அந்தக் கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பார் இந்த கட்சிக்கு வாய்ஸ் கொடுப்பார் என்றெல்லாம் சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆனால் பல வருடங்களாக ரஜினி மக்கள் மன்றத்துக்காக செலவு செய்து ரஜினியின் கட்சி மூலம் பதவியை அடையலாம் என பல மாவட்ட செயலாளர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு ரஜினியின் அறிவிப்பு ஏமாற்றம் அளித்ததால்… வேறு கட்சிகளில் சேர முடிவெடுத்தனர். இதிலும் சிலர் தலைமைக்கு தொடர்புகொண்டு நாங்கள் வேறு கட்சியில் சேரப் போகிறோம் என்று சொல்ல… உங்கள் விருப்பப்பட்ட கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று ரஜினியிடம் ஒப்புதல் பெற்று தலைமை வழியாக பதில் வந்துள்ளது.
இந்த நிலையில்தான் இன்று ஜனவரி 17ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில் செல்வனாத், தேனி மாவட்ட செயலாளர் கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே. வி. எஸ். சீனிவாசன் ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சென்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர்.
இவர்களில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பெயரில்தான் ரஜினியின் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
திமுகவில் சேர்ந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின்…ரஜினிகாந்த் கொரோனா காலகட்டத்தில் தனது உடல்நிலையை காரணமாக வைத்து அரசியலுக்கு வரவில்லை என்று முடிவெடுத்தார். அதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டோம். அதன்பிறகு எங்களுடைய அரசியல் செயல்பாடுகளை தொடர்வதற்காக திமுகவில் சேர்ந்து இருக்கிறோம் . இதுகுறித்து தலைமையிடம் கூறியபோது விருப்பப்பட்ட கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தெரிவித்தனர்”என்று கூறினார்.
இதையடுத்து ரஜினி மக்கள் மன்றத்தின் இன்னும் பல மாவட்டச் செயலாளர்கள் அதிலிருந்து விலகி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளில் சேர இருக்கிறார்கள் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
**-வேந்தன்**
�,”