பண மோசடி வழக்கில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தால் முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அன்று விருதுநகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டம் முடிந்த கையோடு தலைமறைவானார்.
சரியாக 20 நாட்கள் போலீசுக்கு போக்கு காட்டி தலைமறைவாகவே இருந்த ராஜேந்திரபாலாஜியை நேற்று (ஜனவரி 5) முற்பகல் கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் வைத்து கைது செய்துள்ளது தமிழக தனிப்படை போலீஸ்.
இந்த சேஸிங் படலம் பற்றி முழுதாக விசாரித்தோம். அப்போது கிடைத்த தகவல்கள்….
**ஆயுர்வேத சிகிச்சைப் பின்னணி**
17ஆம் தேதி தலைமறைவான ராஜேந்திரபாலாஜி நேராக தென்காசி வழியாக செங்கோட்டை புளியரை சென்று அங்கிருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் ஓர் ஆயுர்வேத வைத்திய சாலையில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார். அங்கே சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு வேறு வேறு கார்களில் ஏறி பல நகரங்களுக்கு சென்றிருக்கிறார். பின் மீண்டும் ஓசூர் சென்றிருக்கிறார். அவர் ஓசூர் சென்று சேர்ந்த நிலையில்தான் டிசம்பர் 23 ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அதனால் அவரால் விமான நிலையம் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
**எங்கே தங்குவது? உதவிய மாஜி கேபினட் சகா**
இந்த நிலையில்தான் டிசம்பர் இறுதிவாரம் முழுதும் கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளிலேயே டேரா அடித்திருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. அப்போது தனது முன்னாள் அமைச்சரவை சகாவான கே.பி. அன்பழகனின் உதவியை நாடியிருக்கிறார். முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் மற்றும் ஓட்டுநர் ஆறுமுகம் இருவரும் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியுடன் ஒன்றாக இருந்ததும், தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பொன்னுவேலுவை டிசம்பர் 29ஆம் தேதி மதியம் தர்மபுரி மாவட்டத்தில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்தனர் போலீஸார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகனின் ஓட்டுநனர் ஆறுமுகத்தைக் கைது செய்தனர்.
**கிருஷ்ணகிரி டு ஹசன்**
அவரிடம் தனிப்படை நடத்திய விசாரணையில்தான் ராஜேந்திரபாலாஜி கர்நாடகாவில் முகாமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆறுமுகத்தை விசாரிக்க வேண்டிய வகையில் விசாரித்த போலீசார். ‘உண்மையை சொல்லிவிட்டால் உன் மேல் கேஸ் எதுவும் போடமாட்டோம். இல்லையென்றால் தலைமறைவு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்தில் வழக்குப் போட்டு கைது செய்வோம்’ என்று சொன்னதும் ஆறுமுகம் அப்படியே அனைத்தையும் கக்கிவிட்டார்.
அதன்படி, ‘ராஜேந்திரபாலாஜிக்கு கே.பி அன்பழகன் மட்டுமல்ல முன்னாள் அமைச்சர் ஓசூர் பாலகிருஷ்ண ரெட்டியும் உதவியிருக்கிறார். அவர்கள்தான் பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணனைப் பிடித்து கர்நாடகாவின் உள் வட்டாரப் பகுதியில் ராஜேந்திரபாலாஜியை தங்க வைக்க ஏற்பாடு செய்திருகிறார்கள்.
பெங்களூருவில் இருந்து சுமார் இருநூறு கிலோ மீட்டர் தூரம் உள்ள மாவட்டம் ஹசன். மலைக்காடுகள் நிறைந்த இயற்கை எழில் மிகுந்த மாவட்டம் ஹசன். ஹசனில்தான் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் ஏவப்படும் செயற்கைக் கோள்களை கண்காணிக்கும் ஆராய்ச்சி நிலையம் இருக்கிறது. அந்த நிலையத்தின் அருகேதான் ராஜேந்திரபாலாஜியை தங்க வைத்திருக்கிறார் பாஜக பிரமுகர் ராமகிருஷ்ணன்.
**இருப்பிடம் அறிந்த பின் மாற்றப்பட்ட போலீஸ் டீம்!**
இந்த தகவல்களை எல்லாம் ஆறுமுகம் மூலம் முழுதாக மோப்பம் பிடித்துவிட்டது போலீஸ். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ராஜேந்திரபாலாஜியின் இருப்பிடம் தெரியவந்த நிலையில் அவரை பிடிக்கும் பொறுப்பு மேற்கு மண்டல போலீஸாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தென் மண்டல போலீசார் குறிப்பாக விருதுநகர் போலீஸார் இந்த ஆபரேஷனில் இல்லவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை விருதுநகர் போலீசார் இந்த ஆபரேஷனில் இருந்தால் ராஜேந்திரபாலாஜி தப்பியிருப்பாரோ என்னவோ என்பதுதான் மேலிடத்தின் எண்ணம். அதனால்தான் திடீரென கர்நாடகாவில் இருந்த ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும் பொறுப்பு விருதுநகர் போலீஸ் அல்லாத டீமிடம் கொடுக்கப்பட்டது.
** ஹசன் மிஷன்**
புத்தாண்டுக்கு பிறகு ஹசன் மாவட்டத்திலே ராஜேந்திரபாலாஜி சுற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த போலீஸ் டீம், பெங்களூரு முதல் ஹசன் வரையிலான அனைத்து டோல்கேட்டுகளிலும் தனிப்படை போலீஸாரை கண்காணிப்பில் ஈடுபடுத்தினர். ஒரு டீம் ஹசன் மாவட்டத்துக்கும் சென்றது. அங்கே ஹசன் மாவட்ட காவல்துறையினரிடம் விஷயத்தைச் சொல்லி ராஜேந்திரபாலாஜிக்கு பின்னே இருக்கும் அரசியல் பின் புலத்தையும் வழக்குப் பின் புலத்தையும் விளக்கியுள்ளனர்.
மெல்ல மெல்ல ராஜேந்திரபாலாஜியை சுற்ற விட்டு நேற்று (ஜனவரி 5) ஒரு கோயிலுக்கு சென்று கொண்டிருந்த அவரது காரை ஹசன் கலெக்டர் அலுவலகம் அருகே சுற்றி வளைத்தனர் தனிப்படை போலீசார். போலீஸ் வாகனத்தைப் பார்த்ததும் ராஜேந்திரபாலாஜி எதுவுமே பேசவில்லை.
காருக்கு முன்னே இன்னொரு கார் நின்று சில வார்த்தைகள் சத்தமாக பேசப்பட்டதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் கிட்னாப் கிட்னாப் என்று சத்தம் போட்டனர். ஆனால் ராஜேந்திரபாலாஜி அருகே சென்ற டி.எஸ்.பி. ’வாங்க போலீஸ் வண்டிக்குப் போகலாம்’என்றதும் காவி வேட்டி டிஷர்ட் போட்டிருந்த ராஜேந்திரபாலாஜி எதுவும் சொல்லாமல் ஏறி போலீஸார் வந்த காரில் அமர்ந்துகொண்டார். அவருடன் இருந்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் ராஜேந்திர பாலாஜி உட்பட கைதானவர்கள் அனைவரையும் ஹசன் டவுனில் உள்ள அரசு மருத்துவமனையில் போலீஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினர். இதையடுத்து ஹாசன் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் கவுடா உதவியுடன் கைதானவர்களைத் தனிப்படை போலீஸார் ஹசன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
**ஓசூருக்குப் பின் கம்பி வண்டி**
அதன் பின் நீதிமன்ற உத்தரவு பெற்று ஹசனில் இருந்து 229 கிலோ மீட்டர் காரிலேயே தமிழகத்துக்கு அழைத்து வந்தனர். அழைத்து வந்த போலீஸாரிடம் ராஜேந்திரபாலாஜி பெரிதாக எதுவும் பேசவில்லை. ஹசனில் பிடிக்கப்பட்டதுமே விருதுநகர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று இரவு விருதுநகர் போலீசார் ஓசூர் சென்று காத்திருந்தனர். அங்கே கர்நாடக எல்லை தாண்டி தமிழக பகுதி வந்ததும் தனிப்படை போலீசார் விருதுநகர் போலீசாரிடம் ராஜேந்திரபாலாஜியை ஒப்படைத்தனர்.போலீஸார் கம்பி வலை போட்ட வெள்ளை வேனை வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ந்துவிட்டார் ராஜேந்திரபாலாஜி. ‘சார் என் கார்ல விருதுநகர் வரைக்கும் வந்துடறேன். இதுல ஏறி வர முடியாது சார். ரொம்பப் படுத்தும்’ என்றார். ‘இல்ல சார், இதுலதான் போகணும்’ என்று சொல்லி போலீஸார் அவரை ஏற்றினார்கள். நள்ளிரவு 1 மணிக்கு மேல் விருதுநகருக்கு கொண்டுவரப்பட்டார் ராஜேந்திரபாலாஜி.
**15 நாள் நீதிமன்றக் காவல்**
நள்ளிரவு முதல் விடிய விடிய ராஜேந்திர பாலாஜியை விசாரித்த போலீசார் இன்று (ஜனவரி 6) காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி பரம்வீர் முன் ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால், போலீசாரோ ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். .
நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ராஜேந்திரபாலாஜியை சிறைக்கு கொண்டு செல்லப் புறப்பட்டனர் போலீசார்.
**-வணங்காமுடி**
�,”