ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் என்று தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறது.
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்த வழக்கில், அவரது முன் ஜாமீன் மனு கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதையடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருந்தாலும், தமிழக போலீஸார் தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் தலைமைறைவானார். அதோடு உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தார். ஆனால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து உச்ச நீதிமன்றம் ஜனவரி 6 ஆம் தேதிதான் திறக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று (ஜனவரி 5) ராஜேந்திரபாலாஜி கர்நாடகா மாநிலம் ஹசன் மாவட்டத்தில் வைத்து தனிப்படையால் கைது செய்யப்பட்டார். இன்று (ஜனவரி 6) காலை அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுவிட்டார்.
இந்த நிலையில் அதன் பின் இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன் ஜாமீன்மனு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது,
ராஜேந்திரபாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த மனு இன்று விசாரணைக்கு வரலாம் என்று யூகித்து நேற்றே ராஜேந்திரபாலாஜியை அவசரமாக தமிழக போலீஸார் கைது செய்துவிட்டனர்” என்று தெரிவித்தார்கள்.
அப்போது நீதிபதி, “முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அரசியல் உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்யப்பட்டதா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக அரசுத் தரப்பில், “அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை” என்று பதிலளித்தனர்.
அப்போது நீதிபதிகள், “இன்று அவரது முன் ஜாமீனை விசாரிக்க இருந்த நிலையில் நேற்றே அவசரமாக அவரை கைது செய்ய வேண்டிய அவசரம் என்ன? ராஜேந்திரபாலாஜி தரப்பின் வழக்கறிஞர்களையும் நீங்கள் தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்கள். அது ஏன்? ”என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,
ராஜேந்திரபாலாஜியோடு இதில் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களான பாபுராய், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்ய தடை விதித்தனர். மேலும், ராஜேந்திரபாலாஜியின் முன் ஜாமீன் மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு ஜனவரி 10 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதற்கிடையில் ராஜேந்திரபாலாஜி மீது அடுத்தடுத்த வழக்குகள் தொடர்வதற்கான பணிகளில் விருதுநகர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
**-வேந்தன்**
�,