�இரட்டை இலையில் ஜெயித்தவரெல்லாம் பாஜகவுக்குப் போய்விடுவார்கள்- திருமா

Published On:

| By Balaji

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு நாளை தமிழகத்திலும் பாஜகவால் நடத்தப்படக் கூடும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல், திருமாவளவன் எச்சரித்துள்ளார்.

இன்று (பிப்ரவரி 22) சேலத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னனி ஒருங்கிணைப்பில் நடைபெறும் UAPA கருப்புச் சட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தொல்.திருமாவளவன்,

“மக்களை சந்தித்துகொள்கையை எடுத்து வைத்து பரப்புரை செய்து தேர்தலை சந்தித்து ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல்… வெற்றி பெற்ற கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைபேசி ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியைக் கவிழ்ப்பது எவ்வளவு அநாகரிகமான அரசியல்.

இன்று புதுச்சேரியில் நாராயணசாமியின் ஆட்சியை மோடியின் கும்பல் கவிழ்த்துவிட்டது. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வரும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க வேண்டிய அவசியம் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

புதுச்சேரியில் நடப்பது ஒரு ஒத்திகைதான். தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து ஒருவேளை திமுக ஆட்சி அமைந்தாலும் கூட, அந்த ஆட்சியையும் எங்களால் கவிழ்க்க முடியும் என்று இப்போதே உணர்த்தக் கூடிய ஒரு நடவடிக்கையாகத்தான் இப்போது இவர்கள் புதுச்சேரியில் இதை செய்துகொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு ஆபத்தானது என்பதை ஜனநாயக சக்திகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

என்ன திடீரென காங்கிரஸ் உறுப்பினர்களூக்கு ஞானோதயம் ஏற்பட்டு ராஜினாமா செய்கிறார்கள்? எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்யாமல் பாஜகவுக்குப் போனால் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள். அதனால்தான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போகிறார்கள்.

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து என்னென்ன கூத்து நடக்கப் போகிறதோ தெரியவில்லை. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி அதிமுகவை பாஜகதான் அழிக்கப் போகிறது. இரட்டை இலையில் ஜெயித்து வருகிறவர் எல்லாம் பாஜகவுக்கு போகப் போகிறார்கள். ஆனாலும் தமிழ்நாட்டில் என்ன முயற்சி எடுத்தாலும் உங்கள் பருப்பு வேகாது. ஆள் பிடிப்பதால் இங்கே ஆட்சியை பிடித்துவிட முடியாது”என்று பேசியிருக்கிறார் திருமாவளவன்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share