கழக அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் மினி தொடர் 19
ஆந்திர அரசியல் களத்துக்கும் தமிழக அரசியல் களத்துக்கும் இடையிலான வேறுபாட்டை திமுகவுடன் ஒப்பந்தம் போட்ட நாள் முதலே ஆராய ஆரம்பித்துவிட்டார் பிரசாந்த் கிஷோர்.
ஆந்திராவில் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஜெகன் மோகனுக்காக ஐபேக் டீமின் 400 பேர் பணியாற்றினார்கள். அவர்களில் சிலரை தேர்ந்தெடுத்து தமிழக களத்துக்கும் ஆந்திர களத்துக்கு இடையே உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை பட்டியலிட்டுத் தரச் சொல்லிக் கேட்டுள்ளார் பி.கே.
ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் அரசியல் ரீதியாக ஒப்பிட்டால் ஒன்றாக இருப்பது போலத் தோன்றும். இங்கே எம்ஜிஆர் போல, அங்கே திரை நட்சத்திரம் என்.டி.ஆர். கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தார். இது ஒற்றுமை. தமிழகத்தில் தேசியக் கட்சியான காங்கிரஸ் 1967 இலேயே ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால் ஆந்திராவில் நேற்று முன் தினம் வரைக்கும் காங்கிரஸுக்கும் மாநிலக் கட்சியான தெலுங்குதேசக் கட்சிக்கும்தான் போட்டி. ஆனால் காங்கிரஸின் வலுவான தலைவராக விளங்கிய ராஜசேகர ரெட்டியின் மரணத்துக்குப் பின் அவரது மகனான ஜெகன் மோகன் ரெட்டியை காங்கிரஸ் புறக்கணித்தது. இதனால் ஜெகன் தனிக் கட்சி கண்டு, இப்போது ஆந்திராவிலும் தமிழகத்தைப் போல காங்கிரசை தேய்த்துவிட்டார். ஆனால் ஜெகனின் கட்சி பெயர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசாக இருந்தாலும் ஆந்திராவில் தேசியக் கட்சியான காங்கிரஸ் இப்போதைக்கு இல்லை.
ஆந்திராவுக்கும் தமிழகத்துக்கும் இன்னொரு முக்கிய வேற்றுமை பணம். ஆந்திர தேர்தல் களத்தில் பணம் புழங்குவது உண்மை என்றாலும், தமிழக தேர்தல் களத்தில் புழங்கும் அளவுக்கு அபரிமிதமான பணம் ஆந்திராவில் இல்லை என்பது பிகே டீமின் கணிப்பு. மேலும் தமிழகத்தில் கிராமங்கள் நகரமயமாதல் அதிகரித்திருக்கிறது. அதனால் ஒரு செய்தியை தகவல் தொழில் நுட்பம் மூலம் இன்று குக்கிராமங்களுக்கு கூட கொண்டு சென்றுவிட முடியும். ஆனால் ஆந்திராவில் கிராமங்கள் நகரமயமாதல் தமிழகத்தை விட குறைவு.
தொழில்நுட்ப அரசியல்வாதி என்று சொல்லப்படும் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சியில் கிராமப்புறங்களையோ, விவசாயிகளையோ திருப்திப்படுத்தவில்லை என்ற முக்கியமான பிரச்சினையை கையிலெடுத்து ஜெகன் பாத யாத்திரை நடத்தினார். தன் தந்தை மரணத்தை அடுத்து தற்கொலை செய்துகொண்டவர்களின் குடும்பத்தை சந்திப்பதற்காக முதல்பயணத்தை முன்பே நடத்திய ஜெகன், அதன் பிறகு தொடர்ந்து மக்களை சந்தித்தார்.
ஏறக்குறைய ஒரு வருடம் ஆந்திராவில் முகாமிட்ட பிரசாந்த் கிஷோர் குழுவினர் ஜெகனை ப்ரமோட் செய்வதில் மட்டுமல்ல, ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான பரப்புரைகளையும் தொழில்நுட்ப ஊடகம் தொடங்கி, பத்திரிகைகள், வானொலிகள் வரை திறம்பட நடத்தினர். சந்திரபாபு நாயுடுவால் புறக்கணிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், விவசாயிகளை, நாயுடுவுக்கு எதிரான இந்தப் பிரசாரம் வெகுவாக ஈர்த்து ஜெகனுக்காக ஓட்டுகளைப் பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் திட்டத்தை சந்திரபாபு நாயுடு புறக்கணித்தார். இதை மட்டுமே விவசாயிகளிடம் எடுத்துச் சென்று வாக்குகளாக்கியது பிகேவின் டீம்.
இங்கேதான் பிரச்சாரப் பொறியியல் ஒர்க் அவுட் ஆகிறது. ஒரு தொகுதி என்று வரும்போது அதில் பலதரப்பட்ட சமூகப் பிரிவினர், வேறுபட்ட தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். இதில் மாநிலத்தை ஒரு அலகாக எடுத்துக் கொண்டால் மாநிலத்திலும் பல்வேறு பிரிவினர், பல்வேறு தொழில் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவரவர் பிரச்சினையை தவிர அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. விரும்புவதில்லை என்பதை விட அவர்களுக்கு அது தேவையில்லை என்பதே நிஜம். இந்த வகையில் பிரச்சாரத்தின் முக்கியக் கூறுகள் பொதுவாகவும் செய்யப்படும். அதேநேரம் யார் யாரிடம் எது சென்று சேர வேண்டுமோ அங்கே அது கூர்மைப்படுத்தப்படும், வீச்சு வேகமாக்கப்படும்.
தொகுதிக்கு ஒரு தேர்தல் அறிக்கை என்று இங்கேயும் நமது அரசியல் கட்சிகள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்தந்த தொகுதிகளுக்கு அந்தந்த தேர்தல் அறிக்கை சென்று சேர்ந்திருக்கிறதா என்பதுதான் தமிழ்நாட்டில் பிகேவுக்கு முக்கியமான வேலை என்கிறார்கள்.
இதற்காகவே சென்னை அண்ணா நகரில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் அலுவலகம் அமைத்துவிட்டதாகவும், அறிவாலயத்தை இனி அண்ணா நகர் கட்டுப்படுத்தும் என்றும் திமுகவில் கிசுகிசுக்கிறார்கள்
(கார்ப்பரேட் அரசியல் பயிலக் காத்திருங்கள்)
[தேர்தலுக்காக பிகே நடத்தும் தேர்தல்!](https://www.minnambalam.com/politics/2019/12/24/93/prasanth-kishore-conduct-elections-for-his-ipac-staffs-to-select-the-party)�,