பிபின் ராவத் மறைவு ஒவ்வொருவருக்குமான இழப்பு: பிரதமர்

Published On:

| By Balaji

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவு நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொருவருக்குமான பேரிழப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரயு, ரப்தி, ககாரா, ரோஹினி உள்ளிட்ட ஐந்து நதிகளை இணைக்கும் பிரமாண்ட நீர்ப்பாசனத் திட்டமான சரயு நீர்ப்பாசன திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (டிசம்பர் 11) தொடங்கி வைத்தார். அப்போது, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி குறித்து பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசுகையில், “இந்தியாவின் முதல் முப்படைத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், நாட்டின் பாதுகாப்புப் படைகள் தற்சார்புடையதாக மாற மேற்கொண்ட கடின உழைப்பை ஒட்டுமொத்த தேசமும் பார்த்தது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவு நாட்டுப்பற்று உள்ள ஒவ்வொருவருக்குமான இழப்பு.”

இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஜெனரல் ராவத்தின் முயற்சியைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, பாதுகாப்புப் படைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

“பிபின் ராவத் எங்கியிருந்தாலும், புதிய தீர்மானங்களுடன் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதை விண்ணுலகில் இருந்து பார்ப்பார். இந்தியா அவருக்காக துக்கத்தில் உள்ளது. நாடே வலியில் இருந்தாலும், வளர்ச்சியின் வேகத்தை ஒருபோதும் தடுக்காது. இந்தியா ஒருபோதும் ஸ்தம்பித்து நிற்காது. இந்தியர்களாகிய நாம் கடுமையாக உழைத்து, நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்வோம்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி கொண்டிருக்கின்றனர். மா பாதேஸ்வரி அவரது உயிரைக் காப்பாற்ற நான் வேண்டிக் கொண்டிருக்கிறேன். இந்த தேசமே அவரது குடும்பத்திற்கு துணை நிற்கும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share