பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நேற்று நள்ளிரவு இம்ரான் கான் நீக்கப்பட்டார்.
ஏப்ரல் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கான் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் விவாதம் தொடங்கியது. பல்வேறு அமளிகளுக்கு இடையே நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 1. 30 மணிக்கு இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடந்தது.
342 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் 174 பேர் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக வாக்களித்ததால் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அகற்றப்படும் முதல் பிரதமர் இம்ரான் கான்.
ஏற்கனவே பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்த துணை சபாநாயகர் நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றம் சென்றன.
ஏப்ரல் ஏழாம் தேதி துணை சபாநாயகர் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 9ஆம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துமாறு உத்தரவிட்டது.
இதன்படி நேற்று காலை தொடங்கிய நாடாளுமன்றத்தில், இரவு 12 மணி அளவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு தொடங்கியது. இதில் இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்தார்.
**வேந்தன்**