பாலியல் தொல்லையில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவையைத் தொடர்ந்து, கரூரில் பாலியல் தொல்லை காரணமாக நேற்று பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்னதாக மாணவி எழுதியுள்ள கடிதத்தில்,”பாலியல் தொல்லையால் சாகுகிற கடைசி பெண் நானாக இருக்கட்டும். மேலும் நான் இந்த முடிவை எடுப்பதற்கு காரணமானவர்களை வெளியில் சொல்ல பயமா இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லையால் தொடர்ந்து மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில்,” கரூரைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 17 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும், பாலியல் துன்புறுத்தலால் இறக்கும் கடைசி பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று உருக்கமாக கடிதம் எழுதியுள்ள செய்தியும் என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த மாணவிக்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில், ‘பாலியல் தொல்லை காரணமாக கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தி, மிகுந்த சோகத்தை ஏற்படுத்துகிறது.
குழந்தைகள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறையை எதிர்க்கவும் எந்த ஒரு அச்ச உணர்வுமின்றி அதுகுறித்த புகாரை வெளியே சொல்வதற்குமான பாதுகாப்பான சூழலை நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இந்த அவல நிலையை மாற்ற, இனியும் இம்மாதிரியான கொடும் சம்பவம் நிகழாமல் தடுக்க நாம் அனைவரும் உறுதி ஏற்கவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-வினிதா**
�,