ஸ்மார்ட் சிட்டி முறைகேடு: ஒருநபர் ஆணையம் அமைப்பு!

Published On:

| By admin

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த ஊழல் முறைகேடுகளை விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2015 ஜூன் 25ஆம் தேதி ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிமுகம் செய்தது. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை ஐந்தாண்டுகளில் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய 11 இடங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கான செலவை 50 சதவிகிதம் ஒன்றிய அரசும், 50 சதவிகிதம் தமிழக அரசும் பகிர்ந்து கொள்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் விடாமல் பெய்த மழையில் தியாகராய நகரில் மழைநீர் தேங்கி நின்றது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியாக வடிவமைக்காத காரணத்தால்தான் சென்னையில் தியாகராய நகரில் மழைநீர் அதிகம் தேங்கியது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதை நேரில் பார்வையிட்ட முதல்வர், இந்த முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்தியதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு கீழ்க்கண்ட விசாரணையை மேற்கொள்ளும்.
பொது மக்களின் நலன் கருதி இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகள் திட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து தேர்வு செய்யப்பட்டுள்ளதா?
தேர்வு செய்யப்பட்ட திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான வளர்ச்சியை கொண்டுள்ளதா?
ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு சிறப்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் நடந்ததா?
ஒன்றிய அரசும் தமிழக அரசும் ஒதுக்கீடு செய்த நிதி உரிய விதிகளின்படி பயன்படுத்தப்பட்டுள்ளதா?
திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் ஸ்மார்ட் சிட்டி மிஷனின் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டதா?
திட்டத்தைத் தரத்துடன் செயல்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதா?
திட்டத்தில் பெரிய அளவில் குறைபாடு ஏற்பட்டு அதை ஒன்றிய அரசோ அல்லது சட்டபூர்வமான அமைப்போ தணிக்கை செய்துள்ளதா? அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
இந்தத் திட்டத்தை வேறுவிதமாகச் செயல்படுத்த தனிப்பட்ட நபர்கள், காரணிகள் பொறுப்பாகியுள்ளனரா, அது கண்டறியப்பட்டுள்ளதா?
பொது மக்களின் நலன் கருதி எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு கருத்துகள் கேட்கப்படும்.
அவ்வப்போது அரசு வெளியிடும் ஆலோசனைகளும் இந்தக் குழு கருத்தில் கொள்ளும்.
இந்த விசாரணை குழு தனது விசாரணை அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த விசாரணை குழுக்கான அலுவலகம் நகர நிர்வாக ஆணையரக வளாகத்தில் அமைக்கப்படும். இதற்கான அலுவலக ஏற்பாடுகள், உதவியாளர்களை நகர நிர்வாக ஆணையர் செய்து தர வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், ஸ்மார்ட் சிட்டி இயக்குநர், நகராட்சி, சிறப்புப் பணி வாகன தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்புடைய அரசு அதிகாரிகள் இந்த ஒரு நபர் விசாரணை குழுவுக்கு உரிய உதவிகளைச் செய்து தர வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share