கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் நபிகள் நாயகம் பற்றி இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சாதாரண கைது நடவடிக்கை போதாது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று (பிப்ரவரி 2) டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கல்யாண ராமன் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இயக்குனர் அமீர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று டிஜிபி அலுவலகத்துக்கு வந்த எஸ்டிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன்,
“முஸ்லிம்கள் உயிராக நினைக்கும் நபிகள் நாயகம் பற்றி கல்யாண ராமன் பேசியதால் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இவர்கள் மதக் கலவரத்தை உண்டுபண்ணி அதன் மூலம் வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கிலே கல்யாணராமனை பாஜக ஏவி விட்டிருக்கிறது. கல்யாணராமன், ‘நான் இப்படித்தான் பேசுவேன். என்னை கைது செய்வார்கள்.வெளியே வந்து மீண்டும் இப்படித்தான் பேசுவேன்’ என்று சட்டத்தை எக்காளம் செய்கிறார். அதோடு காவல்துறையையும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார். இப்படி இவர் பேசுவது என்பது முதல் முறையல்ல. பல்வேறு முறை பேசியிருக்கிறார்.
எனவே இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியும் ஒற்றுமையாக வாழும் சமூகத்தினரிடையே பிரிவினை உண்டாக்கி மத கவலரத்தை தூண்ட முயற்சித்து பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் பிஜேபி கட்சியின் கல்யாணராமன் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறை தலைமை இயக்குநர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தோம்.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. அதனால்தான் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்” என்கிறார்.
அதிமுகவில் இருக்கும் இஸ்லாமிய பிரமுகர்கள் முன்னாள் அமைச்சரான அன்வர் ராஜாவிடம், ‘இப்படியெல்லாம் பேசுபவரை கூட்டணி தர்மம் என்ற பெயரில் நாம் விட்டுக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்த முஸ்லிம் வாக்குகள் மட்டுமல்ல…சிறுபான்மையினர் வாக்குகளையும் இழந்துவிடுவோம். நபிகளை பற்றி பேசுவதை அதிமுகவில் இருக்கும் எந்த இஸ்லாமியரும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என்று கூறியிருக்கிறார்கள். அன்வர் ராஜாவும் இதுகுறித்து முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு உடனடியாகக் கொண்டு சென்றிருக்கிறார்.
எனவே உடனடியாக கைது செய்யப்பட்ட கல்யாணராமன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.
**-வேந்தன்**
�,