கடந்த ஓர் ஆண்டாக நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் யாரும் உயிரிழந்ததாக அரசின் பதிவேட்டில் இல்லை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்ற மசோதா மக்களவையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை திரும்பப்பெறவில்லை.
காரணம், அவர்கள் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். கடந்த ஓர் ஆண்டாக நடைபெறும் இந்த போராட்டத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு மத்திய அரசு வழங்க வேண்டும். அதுபோன்று குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கிடைத்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று அறிவித்தனர்.
அதுபோன்று போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் இன்றைய குளிர்கால கூட்டத்தொடரின் போது, வேளாண் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகள் போராட்டத்தில் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை. அதற்கான எந்த தகவலும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்திடம் இல்லை.
விவசாயிகள் உயிரிழந்ததாக அரசின் பதிவேட்டில் இல்லாதபோது, இழப்பீடு என்ற கேள்விக்கே இடமில்லை. அதுபோன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன” என்று பதிலளித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த பதில் விவசாயிகளிடையே கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
**-பிரியா**
�,