அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 2019 மக்களவைத் தேர்தலை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து எதிர்கொண்டது பாஜக. எனினும், பாஜக போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு 10 மாதங்கள் இருந்தாலும் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது.
இதனிடையே சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக Vs திமுக என்ற நிலை, தற்போது பாஜக Vs திமுக என மாறியிருப்பதாகவும், தங்களுக்கு அனுசரணையாக இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி எனவும், மத்தியில் ஆளும்கட்சி என்பதால் தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், பாஜக தலைமையில் கூட்டணி என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளாரா என்று கேள்வி எழுப்பினார். முருகன் கருத்து கூறிய பிறகே அதிமுக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும், துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறியதை பாஜகவின் நிலைப்பாடாக எடுக்க முடியாது என்று கூறிய ஜெயக்குமார், தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வோம் எனவும், ஆட்சி அமைத்தால் அமைச்சரவையில் பாஜகவுக்கு பங்கு தருவது பற்றி ஆட்சிமன்றக் குழுதான் முடிவு செய்யும் என்றும் கருத்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பெரம்பலூரில் நேற்று (ஆகஸ்ட் 12) செய்தியாளர்களைச் சந்தித்தபோது பதிலளித்த எல்.முருகன், “பாஜக வளர்ச்சி பெற்று வருகிறது என்பதையே பாஜக Vs திமுக என வி.பி.துரைசாமி கூறியுள்ளார். இதில் என்ன இருக்கிறது? தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்திலும் கூட்டணி தொடர்கிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.
**எழில்**
�,