சிறப்புக் கட்டுரை: நாவலரின் நூற்றாண்டு விழா விவாதப் பொருள் என்ன?

Published On:

| By Balaji

-பார்த்தி ரவிச்சந்திரன்

தொடக்ககால திராவிட இயக்கத்தின் லட்சியவாத முகமாக இன்றும் நம் கண் முன் விரியும் முகங்களில் முக்கியமான பிம்பம் நாவலர் இரா. நெடுஞ்செழியன். அபாரமான கொள்கை அரசியல், தள்ளாட்டமான தேர்தல் அரசியல், முக்கியத்துவம் இல்லாத இரண்டாமிட அரசியல் என நாவலரின் அரசியல் மூன்றாக பிரிக்கத்தக்கது அவருடைய அரசியல் வாழ்க்கை.

இதில், நாவலரின் தேர்தல் அரசியல், இரண்டாம் நிலைத் தலைவர் அரசியல் வாழ்க்கை குறித்து போதுமான அளவு விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், புகழ் வீழ்ச்சியடைந்த அவ்விரு அரசியல்களாலும் அதிகம் உணரப்படாததும், கவனிக்கப்படாததும் நாவலரின் கொள்கை அரசியலே.

**நாவலரும், திராவிட நாடும் :**

திராவிட நாடு கேட்டு தீவிரமாக இயங்கிய, திராவிட நாடு கிடைத்துவிடும் என இளைஞர்களை, தன்னை பின் தொடர்பவர்களை ஆழமாக நம்ப வைத்த திமுக தலைவர்களில் ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன். வேலூர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி.விஸ்வநாதனின் சுயசரிதையில் உள்ள வரிகள் நாவலரைச் சார்ந்து இயங்கிய திமுகவினரிடம் இருந்த உணர்வை தெளிவாக்குகிறது.

சட்டக்கல்லூரியில் ஜி.விஸ்வநாதன் பயின்றுகொண்டிருந்த போது அவ்வப்போது வகுப்புகளை ‘கட்’ அடிக்கும் வழக்கம் கொண்டிருந்தவர் விஸ்வநாதன். ஒருநாள் வகுப்புக்கு சென்ற அவரை கல்லூரி முதல்வர் வழிமறித்து, ‘கல்லூரிக்கு வராமல் எப்படி வக்கீல் ஆவதாய் உத்தேசம்?’ என கேட்டிருக்கிறார். அப்போது நெடுஞ்செழியனுக்கு நெருக்கமான வகுப்பு பேராசிரியர் ஒருவர் குறுக்கிட்டு, ‘இவன் ஏன் வக்கீலாக போகிறான். திராவிட நாடு அமைந்த பிறகு நாவலர் இவனை ஐ.நா சபைக்கு திராவிட நாட்டு பிரதிநிதியாக அனுப்பிவிடுவார்’ என கிண்டல் அடித்திருக்கிறார்.

இதன்மூலம் திராவிட நாடு அமைந்துவிடும் என்கிற நம்பிக்கை நாவலர் போன்றவர்களால் திடமாக பரப்பப்பட்டது, ஐ.நா சபை வாய்ப்புகள் உட்பட பல்வேறு வேலைவாய்ப்புச் சார்ந்த நம்பிக்கை எண்ணம் கல்லூரிக் கல்வி கற்றவர்கள் மத்தியில் வரை ஒரு விவாதப் பொருளாக இருந்திருக்கிறது என அறியமுடிகிறது.

M.L.A க்களை விட அதிக M.A.(Master of Arts)க்களைக் கொண்ட கட்சி என விமர்சிக்கப்பட்ட திமுகவுக்குள் இருந்த இத்தகைய கருத்துருவாக்கம் கவனிக்கத்தக்கது.

திராவிட நாட்டின் பரப்பளவு, மக்கள்தொகை, பொருளாதார நிலை, பல வாழ்வியல் கூறுகள், வரலாற்று கால கிழக்கு ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டு பேசும், எழுதும் சிந்தனை கொண்டவர் நாவலர். அச்சிந்தனையையொட்டி, கொள்கை ரீதியாக திராவிட நாடு பெறுவது மட்டுமல்ல, ஏன் திராவிட நாடு அமைய வேண்டும் என்பது முதல் திராவிட நாடு எப்படி செயல்பட வேண்டும், எந்தெந்த காலக்கட்டங்களுக்குள் என்னென்ன வளர்ச்சிகள் அடைய வேண்டும் என்பது பற்றிய கொள்கை நோக்கம் நாவலருக்கு இருந்திருக்கிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எப்படிப்பட்டவை? எந்தெந்த காலத்தில் என்னென்ன மாதிரியான வளர்ச்சிகள் அடைந்திருக்கின்றன என பட்டியலிட்டு, அத்தகைய வளர்ச்சியை திராவிடநாடு எப்போது எட்டும் என திட்டம் அளிக்கும் அரசியலையும் நாவலர் செய்திருக்கிறார்.

சிறிய நாடுகளால் சிறப்பாக இயங்க முடியாது என்ற வாதத்துக்கு எதிராக, எத்தனை நாடுகள் திராவிட நாட்டை விட மக்கள்தொகையில் சிறியவை, பொருளாதாரத்தில், வளத்தில் சிறியவை. அவை எப்படி சிறப்பாக இயங்குகின்றன. அந்த நாடுகளின் வாழ்வாதாரம் பற்றி எல்லாம் விரல்நுனியில் தகவல்களை வைத்திருப்பார். மணிக்கணக்கில் திராவிட நாட்டின் செயல்திட்டங்களைப் பற்றி பேசுவார்.

இரண்டாம் உலகப்போருக்கு பின்பு ஐரோப்பா மீண்டெழுந்தது அவருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். உலகப்போருக்கு பின்பு தங்கள் காலனிகளையும் இழந்த ஐரோப்பிய நாடுகள் விரைவில் மீண்டெழுந்தது, திராவிட நாடு கூட இப்படி பிழைத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை நாவலரின் முன்வைப்பில் இருந்தது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா – ஹங்கேரி ஆகியவை எப்படி மீண்டெழுந்தது என்பதை, சுரண்டப்பட்ட பின்பு சுதந்திரம் பெறப்போகும் திராவிட நாட்டுடன் அவர் பொருத்தி பார்த்தார். பல சமயம் மேடைகளில் ஆஸ்திரியா – ஹங்கேரி பற்றி அவர் பேசியதுண்டு. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஒரு நாட்டின் வளர்ச்சியை தொலைத்தூரத்தில் உள்ள இன்னொரு தனி நாடு கேட்பவர் கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார் என்பதை அவர் உரைகளின் வழியே அறிய முடிகிறது.

அதேநேரம், திராவிட நாட்டுக்கான கலாச்சார பிரச்சனைகளைக் குறித்த அறிதலோடு, திராவிட நாடு கனவைக் குறித்து பேசினார்.

நாவலர் பரப்புரை செய்த திராவிட நாட்டு அடிப்படைகள் என்பது, வெறும் வளர்ந்த நாடுகளுடனான ஒரு ஒப்புமையாக மட்டும் இல்லாமல் பிராமண எதிர்ப்பு – திராவிட இன அடையாளம் – தமிழ் பண்பாடு ஆகிய கூறுகளோடு பின்னிப் பிணைந்திருந்தது.

**நாவலரின் தமிழ் அரசியல்:**

தமிழின அடையாளமாக குறளை முன்னெடுக்க வேண்டுமென்ற எண்ணம் நாவலருக்கு இருந்திருக்கிறது. திருக்குறளுக்கு உரை எழுதிய நாவலர் பரிமேலழகர் உரையின் மூலமாக திருக்குறள் குறித்த மனுவாத கோட்பாடுகளையும், வைதீக அடையாளத்தையும் நிராகரித்திருக்கிறார். திருக்குறளை முன்னிறுத்துவது திராவிட அரசியலின் முக்கியப்பகுதி என்றாலும், அதனை மறுவாசிப்பு அரசியலாக மட்டுமல்லாது, திருக்குறளை திறனாய்வு மூலம் மீளக்கட்டமைக்கும் இலக்கிய வரலாற்று அரசியலாகவும் செய்யும் ஆற்றல் நெடுஞ்செழியனுக்கு இருந்திருக்கிறது. அண்ணாவிற்கு திராவிட நாடு மீதிருந்த மிக துல்லியமானப் பார்வையில் நாவலர் நெடுஞ்செழியனின் பங்கு முக்கியமானது.

புத்தாயிரமாண்டை முன்னிட்டு திராவிடர் கழகம், பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் “புத்தாயிரமாண்டில் தமிழர்களின் இலட்சியம்” என்ற தலைப்பில் நாவலர் ஆற்றிய உரை தான் அவருடைய கடைசி உரை. அந்த உரையின் உள்ளடக்கமும், திராவிட நாட்டைக் குறித்து உருவாக்கிக் கொண்ட சிந்தனைமுறையின் சாயலிலேயே இருந்தது.

பெரியாரிடத்தில் தொடங்கி பெரியார் திடலோடு வாழ்வை முடித்துக்கொண்டதன் மூலம் தன் அரசியல் பாதையில் தெளிவில்லாமல் இருந்தாலும், கொள்கை பாதை தெளிவானது என சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் நாவலர்.

நாவலரின் தள்ளாட்டமான தேர்தல் அரசியல், முக்கியத்துவம் இல்லாத இரண்டாம்நிலைத் தலைவர் அரசியல் இரண்டையும்விட முக்கியமானதும், படிப்பினை மிக்கதும் நாவலரின் இக்கொள்கை அரசியலே. அவரின் நூற்றாண்டின் விவாதப்பொருளாக இருக்க வேண்டியதும் அதுதான்.

**கட்டுரையாளர் குறிப்பு**

பார்த்தி ரவிச்சந்திரன் பயிற்சி மருத்துவத்தை முடித்துவிட்டு, முதுநிலை மருத்துவக் கல்விக்கான தயாரிப்பில் இருப்பவர்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share