குயின்ஸ் லேண்ட் – சட்டப்படி ஜெயித்து காட்டியுள்ளோம்: சேகர்பாபு

Published On:

| By Balaji

குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்னும் நான்கு வாரத்துக்குள் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், சென்னை மாவட்ட கோயில்களின் மேம்பாடு குறித்த கூட்டம் நேற்று (அக்டோபர் 9) நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சென்னை மாவட்டத்தில் அறநிலையத் துறைக்குச் சொந்தமாக, 1,206 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் திருப்பணி, தேர், குளம் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கோயில்களின் பணியாளர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அண்மையில் 14 போற்றி புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இவற்றை முதற்கட்டமாக 46 முதுநிலை கோயில்களில் விற்பனைக்கு வைக்க உள்ளோம்” என்று கூறினார்.

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “குயின்ஸ் லேண்ட் நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் இன்னும் நான்கு வாரத்துக்குள் இந்து அறநிலையத் துறை கட்டுக்குள் கொண்டுவரப்படும் .இதுகுறித்த நீதிமன்ற உத்தரவை நேற்றைக்கே குயின்ஸ் லேண்ட் உரிமையாளருக்கு அனுப்பிவிட்டோம். இந்த விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வாதாடி இந்தத் தீர்ப்பை பெற்றுள்ளது. குயின்ஸ் லேண்ட் நிலத்தை இந்து அறநிலையத் துறை பெற்றுவிட்டால், அதன்பிறகு அத்துறையைப் பற்றி எங்கும் பேச மாட்டேன் என்று ஒரு கட்சியில் இருக்கிற பொறுப்பாளர் கூறியிருந்தார். அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகின்ற ஆட்சி, சட்டத்தின் ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் சட்டப்படி நிலத்தை மீட்டெடுத்து இருக்கிறோம். நிலத்தை மீட்ட பிறகும் இந்து அறநிலையத் துறை பற்றி பேசுவது நியாயமா என்பதை நீங்களே கேளுங்கள். சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கக் கூடாது. சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்கின்ற ஆட்சிதான் தற்போதைய ஆட்சி” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “மயிலாப்பூர் கேசவ பெருமாள் விவகாரம் தொடர்பான நீதிமன்ற வழக்கில், ஆறு மாதத்திற்குள் முறையாக விசாரணை நடத்தி தவறு இருக்கும்பட்சத்தில், அந்த நிர்வாகத்தினரை நிரந்தரமாக நீக்குவதற்கான அறிவுறுத்தலை நீதிமன்றம் வழங்கியுள்ளது. தற்போது இதுகுறித்தான விசாரணை நடைமுறையில் உள்ளது” என்று கூறினார்.

முன்னதாக சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “சென்னை மண்ணடியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பை மீட்க கோரிக்கை விடுத்துள்ளோம். உடனடியாக மீட்பதாக சென்னை மாநகராட்சி ஆணையரும் உறுதியளித்துள்ளார்.

வால்டாக்ஸ் சாலையில் உள்ள நாடக கொட்டகையில், எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் நடித்து உள்ளனர். தற்போது இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதை மீட்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி உதவியுடன் இந்த இடம் விரைவில் மீட்கப்படும்” என்று கூறினார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel