தடுப்பூசி போடும் பணி தொடரும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கருப்பு பூஞ்சை நோய் எதனால் ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ராஜீவகாந்தி அரசு மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு பிரிவை இன்று(ஜூன் 1) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்துள்ளார். உடன் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக எம்பி தயாநிதி மாறன் இருந்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கருப்பு பூஞ்சை நோய் பரவலாக இருக்கிறது. இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 518 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 17 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 518 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கருப்பு பூஞ்சை பற்றி ஆராய 13 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு கருப்பு பூஞ்சை நோய் எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
புதிய முயற்சியாகத் தொடக்க நிலையிலேயே கருப்பு பூஞ்சை நோய் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் ஒரு மையமாக இது செயல்படத் தொடங்கும். இந்த நோய் குணமாக்கக் கூடியது என்பதால் மருத்துவர்கள் தீவிரமாக முயற்சிகளைச் செய்து பலரைக் காப்பாற்றி, நோயாளிகள் நல்ல முறையில் குணமடைந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கருப்பு பூஞ்சை சிகிச்சை மையம் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைவில் தொடங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தடுப்பூசி இன்று வரவில்லையென்றால், தடுப்பூசி போடும் பணி நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை 4.20 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வந்தது. இது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியின் மத்திய அரசின் ஒதுக்கீடு. இன்று இரவே மக்கள் தொகையின் அடிப்படையில் மாவட்ட வாரியாக தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும். நாளை முதல் மாவட்டங்களில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெறும். இந்த மாதத்துக்கு 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், 25 லட்சம் தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிலிருந்து வழக்கமாக வருவது. மீதமுள்ள 17 லட்சம் தடுப்பூசிகள்18-44 வயதுடையவர்களுக்காக தமிழக அரசு சார்பில் பணம் செலுத்தப்பட்டு வருவது.
இன்று தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனை மற்றும் வண்டாலூரில் உள்ள மை இந்தியா மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளுக்கு நானும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களும் நேரில் சென்று, அரசு மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.
**-வினிதா**
�,