வெற்றியை எதிர்த்து வழக்கு: ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு!

politics

அதிமுக எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 66 இடங்களை பெற்று தோல்வி அடைந்தது. திமுக 133 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.

இதில் அதிமுக, திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்செல்வனைவிட 11,055 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி போடி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் தனது வேட்புமனுவில் அவரது மனைவி விஜயலட்சுமி பெற்ற கடனுக்கு உத்தரவாதம் அளித்த சொத்தின் மதிப்பை குறைத்து காட்டியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் கடந்தமுறை விசாரணையின்போது, ஓபிஎஸ் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரர் மிலானிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் இவ்வழக்கு இன்று(ஆகஸ்ட் 13) நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து அதிமுக எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *