வசந்தகுமாரின் உடலுக்கு கே.எஸ்.அழகிரி கண்ணீர் அஞ்சலி!

Published On:

| By Balaji

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.யும், வசந்த் & கோவின் நிறுவனருமான வசந்த குமார் நேற்று மாலை உயிரிழந்தார். அவரது உடல், காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என ஏராளமானோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வசந்தகுமாரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாழும் காமராஜராகவே என் கண்களுக்குத் தெரிந்தார் வசந்தகுமார். செயல் வீரர் மறைந்திருக்கிறார். மனிதர்கள் தான் தவறு செய்வார்கள் என்றில்லை, அவரது மறைவு கடவுள் செய்த தவறு என்று எண்ணத் தோன்றுகிறது. அவரது சொந்த வாழ்க்கையும், பொது வாழ்க்கையும் அங்குலம், அங்குலமாக உயர்ந்தது. அவருக்கு எதுவுமே எளிதாகக் கிடைத்தது கிடையாது. ஒன்றை பெறுவதற்கு மற்றவர்கள் எந்த அளவுக்கு உழைக்கிறார்களோ அதை விட 100 மடங்கு உழைத்துப் பெற்றவர் வசந்த குமார்.

டெல்லியிலிருந்து அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அஞ்சலி செலுத்த இன்று வந்து கொண்டிருக்கிறார். நாளை அவரது உடலை அடக்கம் செய்யும் நிகழ்வுக்காக மற்றொரு அகில இந்தியக் காங்கிரஸ் பொது செயலாளர் வேணுகோபால் வருகை தருவார்” என்று தெரிவித்தார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share