கரூர் மாவட்டம் நூறு சதவிகிதம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாறும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் தொழில்முனைவோர் மற்றும் நெசவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 20) நடைபெற்றது. இதில், கைத்தறி மற்றும் ஜவுளி துறை அமைச்சர் காந்தி, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் ஜவுளி துறை ஆணையர் பீலா ராஜேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, “கரூரில் உள்ள ஐவுளி பூங்கா கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 2011இல் உருவாக்கப்பட்டது. ஐவுளி பூங்கா மூலம் 540 கோடி வியாபாரம் நடைபெறுகிறது. இதன்மூலம் 4,500 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். தொழில்முனைவோர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் ஆட்சியிலும் சரி, தற்போது நடைபெறும் ஸ்டாலின் ஆட்சியிலும் சரி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை முதல்வர் நன்கு தெரிந்துவைத்துள்ளார். இதில், கலைஞர், அண்ணாவைவிட ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “பேருந்துக்கு கூண்டு கட்டுதல், கொசுவலை, ஜவுளி துணி ஆகியவை கரூர் மாவட்டத்தில் பிரதான தொழில்களாக இருந்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான சாயப்பூங்கா பிரச்சினை கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. தொழிலும் வளர்ச்சி பெற வேண்டும், விவசாயமும் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் சாயப்பட்டறை பூங்காவானது விவசாய நிலங்கள், ஆறுகள் பாதிக்கப்படாத வகையில் சுத்திகரிக்கப்பட்ட மையமாக அமைத்து தர முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று, தொழில் நகரமாக உள்ள கரூர் நகரில் பஸ் பாடி, டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை போன்ற நிறுவனங்களை பார்வையிட வெளிநாட்டிலுள்ள ஏற்றுமதி முகவர்கள் வந்து செல்வதற்கு வசதியாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோன்று, விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும். நூறு சதவிகிதம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக கரூர் மாறும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர். பின்பு, மலைக் கோவிலூர் பகுதியில் மூடப்பட்டுள்ள நூற்பு ஆலை இடத்தில் சாயப்பட்டறை பூங்கா அமைப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர்.
**-வினிதா**
�,