|அரசு நிலங்கள் சுருங்குகிறது: நீதிமன்றம் கவலை!

Published On:

| By admin

ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால் அரசு நிலங்களின் பரப்பு சுருங்கி வருவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பெத்தேல் நகர் உள்ளது. பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் அண்ணாதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில் பெத்தேல் நகர் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை கிராம நத்தம் நிலமாக வகை மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தும் அது நிறைவேற்றப்படவில்லை. அதனால் எங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பெத்தேல் நகர் குடியிருப்பு பகுதியிலிருந்து காலி செய்யுமாறு எங்களுக்கு தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். எனவே எங்களுக்குப் பட்டா வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, “அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் பட்டா கேட்க உரிமை இல்லை. பெத்தேல் நகர் பகுதியில் ஒரு சிலர் மட்டுமே ஆரம்பத்திலிருந்து வசித்து வருகின்றனர். மற்றவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்து அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியவர்கள். எனவே அவர்களுக்குப் பட்டா வழங்கினால் ஆக்கிரமிப்புக்குச் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது போலாகும்” என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், அரசின் அனுமதி இன்றி மாவட்ட ஆட்சியரால் நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளைத் தடுக்காததால்தான் அரசு நிலங்களின் பரப்பளவு சுருங்கிக் கொண்டே போகிறது. அரசு நிலங்களைப் பாதுகாப்பது வருவாய்த் துறையினரின் கடமை. அதிகாரிகளுக்குத் தெரியாமல் கண்டிப்பாக இந்த ஆக்கிரமிப்புகள் நடக்காது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஒருபோதும் உதவ முடியாது என்று கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share