மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்தும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றியும் விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டத்துறை செயலர் ஆகியோருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.
அதனடிப்படையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலில், “கடந்த 2001 முதல் 2021 வரை மொத்தம் 24 விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டன. அதில், இரண்டு ஆணையங்களின் விசாரணை மட்டும் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது. அதற்காக,ரூ.3,52,78,534 செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணை முழுமையடையவில்லை. 2017இல் அமைக்கப்பட்ட இந்த விசாரணை ஆணையத்தின் காலவரையறை 2022 ஜனவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதுபோன்று, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு முதல் இந்த ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.4,23,65,557 செலவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,