�டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சி உஷ்ணம்- எடப்பாடியின் அவசர சேலம் பயணப் பின்னணி!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் சேலம் காட்டியது.

“தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (டிசம்பர் 17) காலை சேலம் சென்றுவிட்டு, சேலத்தில் இருந்து இன்று (டிசம்பர் 18) காலை புறப்பட்டுவிட்டார். சேலத்தை விட்டு புறப்படும்போது அவர் அளித்த பேட்டி மின்னம்பலத்தில் தனி செய்தியாக வெளிவருகிறது. அதேநேரம் எடப்பாடியின் இந்த அவசர சேலம் பயணம் என்பது உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கிறது.

சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி நேற்று காலை சேலம் சென்றார். வழக்கமாய் சேலம் சென்றால் நெடுஞ்சாலை நகரில் இருக்கும் தனது வீட்டுக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு அதன் பிறகுதான் மற்ற நிகழ்ச்சிகளுக்கெல்லாம் செல்வார். ஆனால் இம்முறை சேலம் சென்றதுமே நேராக எடப்பாடியிலுள்ள தனது வீட்டுக்குச் சென்றுவிட்டார் முதல்வர். அங்கே சேலம் மாவட்டத்தில் அதிமுக சார்பாக போட்டியிடும் மாவட்ட,ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்களை அழைத்து அவர்களிடத்தில் தனித்தனியாக சில நிமிடங்கள் பேசியிருக்கிறார். டிசம்பர் முதல் வாரத்திலேயே இந்த வேட்பாளர் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. ஆனால் தேர்தல் வழக்குகளால் இந்த சந்திப்பு தள்ளிப்போயிருந்தது.

அதன்பின் எடப்பாடி வீட்டிலிருந்து புறப்பட்டு எடப்பாடி பயணியர் மாளிகைக்கு வந்திருக்கிறார். அங்கே மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகிகளோடு சுமார் இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறார் எடப்பாடி. ‘எம்பி தேர்தல்ல விழுந்த அடி நமக்கு உள்ளாட்சித் தேர்தல்ல விழுந்துடக் கூடாது. நான் கூட ஈசியா ஜெயிச்சுடலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா கட்சிக்குள்ளையும் கூட்டணிக்குள்ளையும் நடக்குற விஷயங்களையெல்லாம் பாக்குறப்போ நமக்கு நாமே எதிரியாகிடுவோம்னு தோணுது. அதனால கட்சிக்குள்ளயோ, கூட்டணிக்குள்ளயோ யாரும் யாருக்கும் எதிரா வேலை பாக்காதீங்க. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்னா கூட உள் வேலைகள் தெளிவா வெளியே தெரியாது. ஆனா உள்ளாட்சித் தேர்தல்ல உள்குத்து செஞ்சா ஈசியா கண்டுபிடிச்சுடலாம்கிறதை ஞாபகத்துல வச்சிக்கங்க’ என்று அட்வைஸ் கொடுத்தவர் பாமக, தேமுதிக கட்சிகளின் ஒத்துழைப்பு பற்றியும் பேசியிருக்கிறார். கூட்டணிக் கட்சிகளை அனுசரிச்சுப் போங்க. கட்சி ரீதியாக அவங்கவங்களுக்கு என்ன சீட் ஒதுக்கியிருக்கோ அதை மீறி யாராவது வேட்பு மனு தாக்கல் பண்ணியிருந்தீங்கன்னா உடனே அதை வாபஸ் வாங்குங்க’ என்றும் கூறியிருக்கிறார் எடப்பாடி. மேலும் எடப்பாடி சேலத்தில் இருந்த இந்த 24 மணி நேரத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கும், அதிமுக நிர்வாகிகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய ‘அத்தனையும்’ கொடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் முக்கியமான தகவல்.

இன்று சேலத்தில் இருந்து புறப்படும்போது எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் பேசுகையில், ‘கட்சினு இருந்தா பிரச்சினை இருக்கத்தான் செய்யும். நாங்க அதை பேசி சரிபண்ணிப்போம்’ என்று சொன்னார். அவசரமாக சேலம் வந்து உட்கட்சிப் பிரச்சினைகளையும், கூட்டணிக் கட்சிப் பிரச்சனைகளையும் பேசி முடித்து செட்டில் செய்துவிட்டுத்தான் இப்படி பேசியிருக்கிறார் எடப்பாடி. அதேநேரம் இன்று காலை ஓமலூரைச் சேர்ந்த முருகன் என்ற அதிமுக பிரமுகர் முதல்வரின் சேலம் வீட்டின் முன்பாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாததால், தீக்குளிக்க முயற்சித்ததாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share