மணல் விற்பனை: மதியத்துக்கு மேல் கவனம் தேவை!

Published On:

| By Balaji

மீண்டும் அரசு மணல் குவாரிகள் தொடங்கப்படுவதாக அறிவித்துள்ள நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், அது தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளார்.

ஜனவரி 7ஆம் தேதி அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொதுமக்கள், ஏழை எளியோர் புதிதாக வீடுகட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டடமற்ற இதரபணிகளை எவ்வித சிரமமுமின்றி மேற்கொள்ளுவதற்கு, இன்றியமையாத கட்டுமானப் பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்காக எளிமையான புதிய வழிமுறைகளை செயல்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து ஆய்வு செய்து, வழங்கியுள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்தும் வகையிலும், பொதுமக்கள், ஏழை, எளியோர் பயன்பெறும் வகையிலும் புதிய வழிமுறைகளை கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு முதல்வர் ஆணையிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ள்ள துரைமுருகன்,

“பொதுமக்கள், ஏழை, எளியோர் எளிதாக இணைய வழியாக மணலுக்கான விலையினை செலுத்தி எவ்வித சிரமமும் இன்றி மண லை எடுத்துச் செல்லுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும். தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளார் துரைமுருகன்.

அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம் இவ்வசதியை, தற்போது நடைமுறையிலுள்ள Net Banking, Debit Card மற்றும் UPI ஆகிய Online வழியாகவும் பணம் செலுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீர் வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் மணல் யூனிட் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் என்றும், இந்த விற்பனையில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுமென்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக அரசு மணல் குவாரிகள் மூடியிருக்கும் நிலையில், தமிழகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் பலரும் மணல் கிடைக்காத காரணத்தால் எம் சாண்ட் உள்ளிட்ட பொருட்களை வைத்தே கட்டுமானப் பணிகள் நடந்தன. இந்நிலையில் அரசின் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியிலும் கட்டுமானத் துறையினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேநேரம் அமைச்சர் துரைமுருகனின் அறிவிப்பில் சில சந்தேகங்களும் எழுந்துள்ளன.

“பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் 2 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்தவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மணலை பதிவு செய்த லாரி உரிமையாளர்களுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.00 மணி வரை மணல் இருப்பை பொருத்து வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார் அமைச்சர். இங்கேதான் இடிக்கிறது. அப்படியென்றால் மதியத்துக்கு மேல் மணல் லாரி உரிமையாளர்களுக்கு மணலைக் கொடுத்து அவர்கள் மூலம் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்க முயற்சிகள் நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். நாளடைவில் காலை நேரத்தில் மணல் இல்லை என்று கூறி மதியத்துக்கு மேல் லாரி உரிமையாளர்களுக்கு மணல் சப்ளை செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதை தடுப்பதற்கு அரசு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நல்ல திட்டம் மக்களுக்கு பயன்படாமல் லாரி உரிமையாளர்களுக்கு மட்டுமே பயன்படும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

[மணல்குவாரிகள்: துரைமுருகன் அறிவிப்பின் பின்னணி!](https://minnambalam.com/politics/2022/01/05/34/Sand-Quarries-Background-of-dmk-minister-duraimurugan-Announcement)

**-வேந்தன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share