மலைவாழ் மக்களுக்காக சேவை செய்த ஸ்டேன் சாமி பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கான மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டதாலும் பிணை மறுக்கப்பட்டதாலும் உடல் நலம் இழந்து இறந்தார். அவரது அஸ்தி பொதுமக்களின் பார்வைக்காக லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அஸ்திக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்.
”அரசபயங்கரவாதத்தின் காரணமாக ஸ்டேன் சாமி மரணம் அடைந்திருக்கிறார். இது அரசக்கொலை. ஸ்டேன் சாமியை தனது ஒடுக்குமுறைகள் மூலம் அரசு பழிவாங்கியிருக்கிறது. பாஜக ஆட்சியில் அறிவுசார்ந்த சக்திகள் இடது சாரி சிந்தனையாளர்கள் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தை முன்னிறுத்தி சிந்திக்க கூடியவர்கள், பேசக் கூடியவர்கள், எழுதக் கூடியவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். அம்பேத்கரின் குடும்பத்தைச் சேர்ந்த ஆனந்த் டெல்டும்பேவும் இந்த புனைவழக்கில் கைது செய்யப்பட்டு சித்ரவதைப்பட்டு வருகிறார். குடியரசுத் தலைவரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின், சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஜனநாயக சக்திகளை காக்க வேண்டும்”என்று கூறியவர்,
”வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்புவோம். மேகதாது அணை விவகாரம், புதிய மீன்வள மசோதா உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்போம்” என்றவரிடம்,
“தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலும், அதைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடக்க இருக்கிறது. இதில் திமுக கூட்டணி தொடருமா?”என்ற கேள்விக்கு,
“இதிலென்ன சந்தேகம்? உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் எங்கள் கூட்டணி தொடரும்”என்று பதிலளித்தார் திருமாவளவன்.
**-வேந்தன்**
�,